கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் அறிமுக மற்றும் செயல் வீரர்கள் கூட்டத்தில் திடீரென நகரச் செயலாளர் பாபு தனது பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மூன்று கட்டமாக வேட்பாளர்களை அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இதில் கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளராக நீலமங்கலத்தைச் சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் சு.ராஜீவ் காந்தி அறிவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் இன்று (மார்ச் 31) கள்ளக்குறிச்சி வேட்பாளர் அறிகுக மற்றும் செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அழகுவேல் பாபுவின் கணவரும் மாவட்ட அதிமுக நகரச் செயலாளருமான பாபு தனது பதவியை ராஜினாமா செய்வதாக மேடையிலேயே அறிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “மனநிலை சரியில்லாத ஒரு நபராக வலம் வந்து கொண்டிருக்கிறேன். பல்வேறு மன உளைச்சல்களுக்கு இடையே “போதும்” என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டு ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறேன்.

அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதில் தனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
தொடர்ந்து நகரக் கழகச் செயலாளர் பதவியில் இருந்து பணியாற்ற தனது மனநிலையும் உடல்நிலையும் ஒத்துழைக்கவில்லை. அதனால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.
வேட்பாளர் ராஜீவ் காந்தியை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.
அவர் மாவட்டச் செயலாளரிடம் அளித்த கடிதத்தில், கள்ளக்குறிச்சி நகர செயலாளராகிய நானும், எனது மனைவியும் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட மகளிரணி தலைவராகிய அழகுவேல் பாபுவும் மன உளைச்சலால் கழக பணியாற்றிட இயலாது. எனவே அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இருவரும் விலகுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மனைவிக்கு மறுபடியும் சீட் கொடுக்காததால் பாபு விரக்தியில் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக ராஜினாமா செய்திருப்பதாகவும் கள்ளக்குறிச்சி அதிமுகவினர் கூறுகிறார்கள்.
