அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 4) முக்கிய தீர்ப்பு வழங்க இருக்கிறது.
2022-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்பொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதிமுகவின் கட்சி விதிகளின் படி, தொண்டர்கள்தான் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்; அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்ததாக அறிவித்தது செல்லாது என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை நிராகரிக்க வேண்டும் என உரிமையியல் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் கடந்த ஜூலை மாதம், எடப்பாடி பழனிசாமியின் மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.பி. பாலாஜி, உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தார்.
பின்னர், சூரியமூர்த்தி தாக்கல் செய்த கேவியட் மனு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதால், உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றது உயர்நீதிமன்றம்.
இவ்வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி நடைபெற்றது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில்தான் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.பி. பாலாஜி தீர்ப்பளிக்கிறார்.
அதிமுகவில் அக்கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.