அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சி பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் சூர்யமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 25) நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்த போது எடப்பாடி பழனிசாமி சார்பில், “2018 முதல் சூர்யமூர்த்தி அதிமுகவின் உறுப்பினராக இல்லை. அவர் அதிமுக வேட்பாளரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டுருக்கிறார். கட்சியில் உறுப்பினராக இல்லாத இவர் கட்சி நடவடிக்கைக்கு எதிராக மனு தாக்கல் செய்ய முடியாது” என்று வாதிடப்பட்டது.
சூர்யமூத்தி சார்பில், கட்சி விதிப்படி அதிமுகவில் உறுப்பினராக தொடர்வதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சட்ட விதிகளுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதி மீறப்பட்டுள்ளது. அதிமுகவை எதிர்த்து போட்டியிடவில்லை. எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி கூட்டணியுடன் சுயேட்சையாகத்தான் போட்டியிட்டார் என்று விளக்கமளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.