அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 21) திரும்ப பெற்றது.
கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓபிஎஸ் ஆதரவாளரான சூர்யமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என சூரியமூர்த்தி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தார் நீதிபதி.
இவ்வழக்கு மீண்டும் இன்று (ஆகஸ்ட் 21) விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, “சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் அல்ல. எனவே இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு உரிமையில்லை” என்று வாதிட்டார்.
சூரியமூர்த்தி தரப்பில் வழக்கறிஞர் வேல்முருகன் ஆஜராகு, “கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டதை மறைத்து, தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர்” என தெரிவித்தார்.
இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கும், வழக்கை நிராகரிக்க மறுத்த உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்த உத்தரவை திரும்பப் பெற்றார் நீதிபதி பாலாஜி. வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.