அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் தாம் இணையப் போவதாக வெளியான செய்திகளை முன்னாள் அமைச்சர் தங்கமணி மறுத்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் எம்பிக்கள் அன்வர் ராஜா, மைத்ரேயன் அக்கட்சியில் இருந்து விலகி அடுத்தடுத்து திமுகவில் இணைந்தனர். இதனால் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணையப் போகும் அடுத்த ‘தலைவர்’ யார் என்பது தொடர்பான யூகங்கள் வலம் வருகின்றன.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியை திமுக தொடர்பு கொண்டதாகவும் திமுகவில் விரைவில் தங்கமணி இணையப் போவதாகவும் நாளேடு ஒன்றில் செய்தி வெளியானது. இது அதிமுக, திமுக வட்டாரங்களில் பரபரப்பை பற்ற வைத்தது.
இதனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ள தங்கமணி, தமது இறுதி மூச்சு உள்ளவரை அதிமுகவில்தான் நீடிப்பேன்; அதிமுகதான் என் உயிர் மூச்சு. சில அரசியல் எதிரிகளே தவறான தகவல்களை வதந்திகளாக பரப்புகின்றனர் என விளக்கம் அளித்துள்ளார்.