அதிமுக ‘துரோகிகளை’ சந்தித்த செங்கோட்டையனை அதிரடியாக நீக்கிய எடப்பாடி! செப். 5 முதல் அக்.31 வரை நடந்தது என்ன?

Published On:

| By Mathi

AIADMK Sengottaiyan EPS

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 31) அறிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் செங்கோட்டையன் அஞ்சலி செலுத்திய மறுநாளே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

செங்கோட்டையனின் கலகம் முதல் நீக்கம் வரை- நடந்தது என்ன?

ADVERTISEMENT

செப்டம்பர் 5: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று பகிரங்கமாக வலியுறுத்தினார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தினார்.

செப்டம்பர் 6: செங்கோட்டையனின் கெடுவை எடப்பாடி பழனிசாமி சற்றும் பொருட்படுத்தவில்லை. மாறாக, கெடு விதித்த மறுநாளே, செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். குறிப்பாக, அவர் வகித்து வந்த அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டன.

ADVERTISEMENT

செப்டம்பர் 8: கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, செங்கோட்டையன் டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்வதாக அவர் தெரிவித்தாலும், டெல்லியில் அவர் பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியதாக செய்திகள் வந்தன. இந்த சந்திப்பு குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை அதிகரித்தன.

செப்டம்பர் 9 அன்று அவர் அமித் ஷாவை சந்தித்ததை உறுதிப்படுத்தினார். எனினும், செப்டம்பர் 10 அன்று, செங்கோட்டையனின் டெல்லி பயணம் தோல்வியடைந்ததாகவும், அமித் ஷா அவருக்கு ஆதரவான பதில் அளிக்கவில்லை என்றும் தகவல்கள் பரவின.

ADVERTISEMENT

செப்டம்பர் 15: அதிமுகவில் பிரிந்தவர்களை இணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் விதித்த 10 நாட்கள் கெடு முடிவடைந்தது. இந்த நாளில், தனது கருத்தை அதிமுக தொண்டர்கள் வரவேற்றதாக செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இருப்பினும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த அரசியல் சதுரங்கத்தில் உச்சகட்ட திருப்பம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் அரங்கேறியது.

அக்டோபர் 30: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் மதுரையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு ஒரே காரில் பயணம் செய்தனர்.

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக அஞ்சலி செலுத்தினர்.

தேவர் நினைவிடத்தில் இணைந்து அஞ்சலி செலுத்திய பிறகு, மூவரும் வி.கே. சசிகலாவையும் சந்தித்துப் பேசினர்.

இந்த கூட்டணி குறித்து டி.டி.வி. தினகரன் பேசுகையில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உண்மையான மரபைக் காக்கவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் “துரோகிகளை” வீழ்த்தவும் இணைந்து செயல்படுவோம் என்று சூளுரைத்தார். ஓ. பன்னீர்செல்வமும் ஒருங்கிணந்த அதிமுகவை தொண்டர்கள் எதிர்பார்ப்பதை சுட்டிக்காட்டினார்.

இந்த திடீர் அரசியல் திருப்பத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். “துரோகிகள் கட்சியைக் குலைக்க முடியாது” என்றும், இவர்களின் கூட்டணி அதிமுகவை ஒருபோதும் பாதிக்காது என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், செங்கோட்டையன் கட்சியின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகவும், திமுகவுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அக்டோபர் 31: இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 31) ஒரு அதிரடி அறிக்கையை வெளியிட்டார். அதில், “அதிமுகவின் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டதாலும், கே.ஏ. செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்குவதாக” அறிவித்தார்.

செங்கோட்டையனின் இந்த நிரந்தர நீக்கம், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் பிடியை மேலும் இறுக்குகிறது என்பதையும், கட்சிக்குள் மாற்றுக்கருத்துகளைத் தெரிவித்தாலோ அல்லது வெளியேற்றப்பட்ட தலைவர்களுடன் தொடர்பு கொண்டால் நடவடிக்கை பாயும் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது. தம் மீதான எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை குறித்து நாளை (நவம்பர் 1) விளக்கம் அளிப்பதாக செங்கோட்டையன் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share