ஏஐ மூலம் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுடன் செல்பி எடுத்தவாறு வீடியோ வெளியிட்ட செல்லூர் ராஜூ ட்விட்டர் பயனர் ஒருவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணையதளவாசிகள், தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளுடன் இருப்பது போல் செல்பி வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக அரசியல்வாதியும் நடிகருமான விஜய் தனது பட கதாப்பாத்திரங்களுடன் செல்பி எடுப்பது போல் வீடியோக்கள் ஏஐ மூலம் எடிட் செய்து நெட்டிசன்கள் வெளியிட்டனர். உடனே அஜித் ரசிகர்களும் அதேபோன்ற ஒரு வீடியோவை வெளியிட்டனர்.
இதுபோன்று ஏஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அரசியல் பிரபலங்களும் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் தான் செல்ஃபி எடுப்பது போன்ற காட்சிகளை உருவாக்கி,
“நண்பர்களே, இன்றைய அறிவியல் வளர்ச்சி எனது இதயதெய்வங்களோடு நான் செல்ஃபி எடுப்பதுபோல்…” என்ற தலைப்பில் அந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோவில் ‘அண்ணா’ இடம் பெறாததால் ஒரு ட்விட்டர் பயனர்,
“ஏஐ-யில் விளையாடும் செல்லூரார், அவ்வளவுதூரம் போய்விட்டு அண்ணாவை சந்திக்காதது நியாயமா?” என்று கிண்டலாகக் கேள்வி எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “நண்பரே, மன்னிக்கவும். தப்புதான்” என்று தனது பதிவில் குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு நெட்டிசன்கள், ‘அண்ணாதான் அமித்ஷாவாக மாறிவிட்டாரே” என கிண்டல் செய்து வருகின்றனர்.
