மனிதன் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் (AI) இன்று மனித இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் சூழலை உருவாக்கி உள்ளது என்று அமெரிக்க பேராசிரியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆரம்பத்தில் ஏஐ தொழில் நுட்பம் என்பது மனித சமூகத்திற்கு ஒரு வரப்பிரசாதம் என்ற அளவில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இன்று அனைத்து துறைகளிலும் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் சூழல் வந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடியை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து கூகுள், மெட்டா, என பல நிறுவனங்கள் தங்கள் ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தின. இதன் எதிரொலியாக உலகம் முழுவதும் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. இன்று பணியில் இருப்பவர்களும் வேலை உத்தரவாதம் குறித்த ஒரு வித அச்சத்துடனே உள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் கென்டகில் உள்ள லூயிஸ்வில் பல்கலைக்கழக கணினி அறிவியல் பேராசிரியரான ரோமன் யம் போல்ஸ்கி, உலகில் பல நிறுவனங்கள் செலவுகளை குறைத்து தங்கள் வருவாயை பெருக்க ஏஐ அமைப்பை விரைவாக செயல்படுத்த தொடங்கி விட்டனர்.
இதனால் நாம் இதுவரை கண்டிராத வேலையின்மையை எதிர்கொள்ளும் உலகை காண்கிறோம். இங்கு 10 சதவிகித வேலையின்மை குறித்து நாம் பேசவில்லை. மனித சமூகத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் 99 சதவிகித வேலையின்மை குறித்து பேசுகிறோம்.
வரும் 2027க்குள் மனிதனை போன்றே நுண்ணறிவு அல்லது செயற்கை பொது நுண்ணறிவு (AGI) பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த ஏஜிஐ வருகைக்கு பின் மனித உருவ ரோபோ பயன்படுத்த படுவதால் தொழிலாளர்கள் சந்தையில் 99 சதவிகிதம் வேலை வாய்ப்பு பறி போகும். ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து உடல் உழைப்பும் தானியங்கி மயமாக்கப்படலாம். இந்த மாற்றத்திற்கு பின் உலகம் மொத்தமாக மாறி இருக்கும்.
ஏஐ 2 விதமான முடிவுகளை நமக்கு தரும். ஒன்று செல்வம் உருவாகும். மக்கள் வசதியான வாழ்க்கையை வாழ இயலும். மற்றொன்று உங்கள் வேலையை ஏஐ பார்த்து கொள்ளும் என்றால் நீங்கள் என்ன செய்வது. அது நமது வாழ்க்கையை மொத்தமாக மாற்றிவிடும்.
அப்பேது நம்மிடம் எந்த வித மாற்றுத் திட்டங்களும் இருக்காது என்று எச்சரித்துள்ளார்.