ADVERTISEMENT

தலை குனியவைத்த AI உச்சி மாநாடு: இன்றைய இந்தியாவின் பிரதிபலிப்பு!

Published On:

| By Minnambalam Desk

சுயமான அறிவாற்றலுக்கும் திறமைக்கும் இந்தியாவில் தட்டுப்பாடு இருப்பதை இந்த மாநாடு அம்பலப்படுத்திவிட்டது.

வீர் சங்வி

இந்திய AI உச்சிமாநாட்டிற்கு பில் கேட்ஸ் வருவாரா மாட்டாரா என்னும் சஸ்பென்ஸ் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தியது. நிகழ்வு தொடங்குவதற்கு முன்பே, திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கேட்ஸ் உரையாற்ற மாட்டார் என்றும் அரசு ‘வட்டாரங்கள்’ தெரிவித்தன. ஆனால், கேட்ஸ் அறக்கட்டளையோ அவர் திட்டமிட்டபடி மாநாட்டில் கலந்துகொள்வார் என்பதில் உறுதியாக இருந்தது.

ADVERTISEMENT

கேட்ஸ் ஏற்கனவே இந்தியா வந்திருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் இந்த ரத்து அறிவிக்கப்பட்டது. கேட்ஸ், ஜெஃப்ரி எப்ஸ்டீன் இடையிலான பழைய சர்ச்சைகள் மாநாட்டின் முக்கியப் பொருளை திசைதிருப்பக்கூடும் என்றும், மேலும் ஒரு நாள் எதிர்மறையான செய்திகள் வருவதை அதிகாரிகள் விரும்பவில்லை என்றும் தோன்றுகிறது.

சர்ச்சைகள் நம் கவனத்தை சிதறடிக்கக் கூடாது என்று இதன் ஆதரவாளர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் சர்ச்சைகளைத் தவிர்க்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். தில்லியில் உள்ளவர்கள் யாரும் இந்த மாநாட்டை மரியாதையுடன் நினைவில் வைத்திருக்கப் போவதில்லை என்பதே உண்மை.

ADVERTISEMENT

இந்தச் சர்ச்சைகள் இன்றைய இந்தியா எவ்வாறு இயங்குகிறது என்பதைக் காட்டுகின்றன. 

சங்கடமான வேடிக்கைகள் 

ADVERTISEMENT

முதல் நாளில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்தன என்பதை அமைப்பாளர்களே மறுக்க மாட்டார்கள். மாநாடு நடந்த இடத்தில் நடந்த திருட்டுகள் (ஒரு வழக்கில் திருடர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் கொள்ளையடித்த பொருட்கள் மீட்கப்பட்டன); மோசமான ஏற்பாடுகள்; வைஃபை தரம்; விற்பனையாளர்கள் யுபிஐ (UPI) ஏற்க மறுத்து, கூப்பன்களை வாங்குமாறு வாடிக்கையாளர்களை வற்புறுத்தியது ஆகியவை குறித்துச் சமூக வலைதளங்களில் புகார்கள் குவிந்தன. சிறந்த ஐடி வல்லரசு என்பதற்கு இதுதான் அழகா!

இரண்டாம் நாளில் நிலைமை ஓரளவுக்குச் சரியாகி இருக்கக்கூடும். ஆனால் அந்த ‘கல்கோட்டியாஸ் நாய்’ (Galgotias dog) குறுக்கே வந்தது.

இதன் பின்னணி: கல்கோட்டியாஸ் என்பது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம். தீவிரமான கல்வியாளர்கள் மத்தியில் இதற்குப் பெரிய மரியாதை கிடையாது. ஆனால் இதைப் பற்றி கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் கவலைப்படுவதில்லை; அவர்கள் தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக்கொள்வதில் எந்தக் குறையும் வைப்பதில்லை. சர்ச்சைகள் வெடித்த மறுநாளே, இந்தியாவின் முன்னணி செய்தித்தாள் ஒன்றில் தங்களைத் தாங்களே புகழ்ந்து தள்ளும் விளம்பர இணைப்பை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

இந்தப் ‘பல்கலைக்கழகம்’ தீவிரத் தேசப்பற்றை ஒரு விளம்பர உத்தியாகப் பயன்படுத்தி, அரசியல் மேலிடத்தை மகிழ்விக்கத் துடிக்கிறது. நிபுணத்துவத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் மதிப்பிடப்பட்டால், இவர்களால் ‘துதிபாடல்’ என்ற பாடத்தை மட்டுமே சிறப்பாக நடத்த முடியும்.

ஆனால் இன்றைய இந்தியாவில், இத்தகைய தரம் குறைந்த, விளம்பரங்களை மட்டுமே நம்பியிருக்கும் அணுகுமுறை வேலை செய்கிறது. சக்திவாய்ந்த அமைச்சர்களிடமிருந்து ‘விருதுகள்’ வாங்குவது போன்ற படங்களைக் காட்டி, அப்பாவிப் பெற்றோர்களை ஏமாற்றி மாணவர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாயை இவர்களால் சம்பாதிக்க முடிகிறது.

அதிகார மையங்களுக்கு நெருக்கமாக இருப்பதால், கல்கோட்டியாஸ் நிறுவனம் தனது AI ‘சாதனைகளை’ இந்த உச்சிமாநாட்டில் காட்சிப்படுத்த அனுமதிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. இந்தச் சாதனைகளில் ஒன்று, அந்தப் பல்கலைக்கழகத்தின் ‘மேதைகளால்’ உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு ரோபோ நாய்.

கல்கோட்டியாஸ் ஆசிரியர்களின் மேதாவித்தனம் அறிவியலில் இல்லை, ஷாப்பிங் செய்வதில் (Shopping) தான் இருக்கிறது என்பது வெளிப்பட்டது. அந்த ரோபோ நாய் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. சுமார் 2 லட்சம் ரூபாய்க்கு இணையச் சந்தையில் அதை யார் வேண்டுமானாலும் வாங்க முடியும் என்பதைச் செய்தியாளர்கள் விரைவில் கண்டுபிடித்தனர்.

உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளும் சர்ச்சையில் சிக்கிவிடுமோ என்று பயந்த அமைப்பாளர்கள், கல்கோட்டியாஸ் குழுவை வெளியேறச் சொன்னார்கள். அவர்கள் வெளியேற மறுத்தபோது, அவர்களது ஸ்டாலுக்கான மின்சாரத்தை அமைப்பாளர்கள் துண்டித்ததாகக் கூறப்படுகிறது.

ஆயினும் பின்வாங்காத கல்கோட்டியாஸ் நிறுவனம், இதெல்லாம் ஒரு தவறான புரிதல் என்று ஊடகங்களிடம் சொல்லத் தொடங்கியது. இது அந்த நிறுவனத்தின் அறிவாற்றலைக் காட்டியது. அந்த நிறுவனத்தின் தகவல் தொடர்புத் துறையைச் சேர்ந்த நேஹா சிங் என்ற பெண்மணி, தான் சரியாக ‘தகவல் தெரிவிக்காததால்’ தான் இந்தச் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறினார். இதில் உள்ள நகைமுரணை கல்கோட்டியாஸில் யாரும் உணரவில்லை.

இறுதியாக, இதற்குத் தங்கள் ஆசிரியர்கள்தான் காரணம் என்று ஒரு செய்திக்குறிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டது. இதன் மூலம் அதன் உரிமையாளர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முயன்றனர்.

அறிவாற்றல் பற்றாக்குறை 

தில்லி குடிமக்கள் ஏன் இவ்வளவு சலிப்படைந்தனர் என்றால், இந்தச் ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) மாநாட்டை நடத்துவதற்கு நிர்வாகத்திடம் போதிய ‘இயற்கை நுண்ணறிவு’ இல்லை என்பது அவர்களுக்குப் புரிந்தது. மாநாடு நடக்கும் இடத்திற்கு அருகில் டாக்சிகள் அனுமதிக்கப்படவில்லை என்றும், பிரதிநிதிகள் மைல் கணக்கில் நடக்க வேண்டியிருந்தது என்றும் புகார்கள் எழுந்தன. சாதாரண பிரதிநிதிகளின் நலனை யாரும் கருத்தில் கொள்ளவில்லை.

முழு கவனமும் விஐபிகள் (VIPs), வெளிநாட்டுத் தலைவர்கள் மீதே இருந்தது. முக்கியமான வெளிநாட்டினருக்கு நமது AI திறன்களையும், ரோபோ நாய்களையும் காட்டுவதே நோக்கமாக இருந்தது. இதற்காகச் சாதாரண குடிமக்கள் துன்புறுத்தப்பட்டனர். சாலைகள் தன்னிச்சையாக மூடப்பட்டன; சாதாரணமாக 30 நிமிடங்கள் எடுக்கும் பயணம் ஐந்து மணி நேரம்வரை நீண்டது.

விஐபி பாதுகாப்பு முக்கியமானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எந்தவொரு நிர்வாகமும் பாதுகாப்பையும் குடிமக்களின் நலனையும் சமமாகப் பார்க்க வேண்டும். ஒரு விஐபி செல்வதற்காக 5-10 நிமிடங்கள் காத்திருப்பதில் மக்களுக்குப் பெரிய வருத்தம் இருக்காது. ஆனால், ஒவ்வொரு முறையும் 40 நிமிடங்கள் போக்குவரத்தை நிறுத்தும்போது, அது நகரம் முழுவதையும் முடக்கிவிடுகிறது. இது நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது.

நிர்வாகத்தாலும் அமைப்பாளர்களாலும் ஏற்பட்ட இந்த குழப்பத்திற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. உலகில் பல நகரங்கள் இதைவிட அதிகமான தலைவர்கள் பங்கேற்கும் மாநாடுகளைத் திறம்பட நடத்தியிருக்கின்றன. மற்ற நகரங்களில் திறமையான மனிதர்கள் இருப்பதால் அவர்கள் பாதுகாப்பைச் சிறப்பாகக் கையாளுகிறார்கள். தில்லியில் திறமையின்மை, விஐபி வழிபாடு, சாதாரண குடிமக்கள் மீதான அலட்சியம் ஆகியவையே மேலோங்கியுள்ளன.

இந்த உச்சிமாநாடு பல வழிகளில் இன்றைய இந்தியாவின் பிரதிபலிப்பு. சிறந்த தொழில்நுட்பச் சிந்தனை, ஆர்வமுள்ள குடிமக்கள் — இவை உலகளாவிய ஆர்வத்தைத் தூண்டுகின்றன. ஆனால் மறுபுறம் திறமையற்ற அதிகாரிகள்; குடிமக்கள் மீது அக்கறையற்ற தன்மை; குறுக்கு வழிகள் மூலம் அப்பாவி மக்களை ஏமாற்றிப் பணக்காரர்களாகும் தரமற்ற நிறுவனங்கள் ஆகியவை ஆதிக்கம் செலுத்துகின்றன.

இப்படியிருக்கும்போது பில் கேட்ஸை அவர்கள் பேச விடவில்லை என்பதில் யாருக்காவது ஆச்சரியம் இருக்கிறதா? அவர் பேசியிருந்தால் நிலைமை இன்னும் கைமீறிப் போயிருக்கும்.

வீர் சங்வி, பத்திரிகையாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர். 

நன்றி: தி பிரிண்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share