ஏன் இப்படியொரு ‘அதிரிபுதிரி’ வெற்றி..?!
ஏற்கனவே பல வெற்றிகளைத் தந்த நாயகன், நாயகி படத்தில் இல்லை. ‘ஹாட் கேக்’ ஆக இதன் இயக்குனர் திகழவில்லை. தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ப ஆக்ஷன், த்ரில்லர், காமெடி, பேமிலி ட்ராமா வகைமையில் கதை அமைக்கப்படவில்லை. இத்தனைக்கும் படத்தில் நடித்தவர்களில் பெரும்பாலானோர் புதுமுகங்கள். அப்படியிருந்தும் எப்படி இப்படியொரு ‘அதிரிபுதிரி’ வெற்றி என பாலிவுட்டே ஆச்சர்யப்படும் அளவுக்கு உள்ளது ‘சையாரா’ படத்தின் வசூல். முழுக்க ‘ரொமான்ஸ்’ வகைமையில் அமைந்திருக்கிறது இப்படம்.
‘வோ லம்ஹே’, ‘ராஸ்’, ‘மர்டர் 2’, ‘ஆஷிகி 2’, ‘ஏக் வில்லன்’ தந்த மோஹித் சூரி இயக்கியிருக்கிற இந்தப் படத்தில் அஹான் பாண்டே நாயகனாக அறிமுகம் ஆகியிருக்கிறார். இரண்டொரு படங்களில் தலைகாட்டிய அனீத் பட்டா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
சரி, இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் அளவுக்கு இப்படத்தில் என்ன இருக்கிறது?

ஒரு ‘காதல்’ கதை!
காதலனைக் கரம்பிடிக்கக் காத்திருக்கிறார் ஒரு பெண். பெற்றோர், இளைய சகோதரன் என்றிருக்கும் தனது குடும்பத்தைக் காதலன் வரவு இன்னும் அழகாக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். கவிதை எழுதுகிற திறமை கொண்ட அவரது மனதில் அந்தக் காதலனே அனைத்துமாகத் தெரிகிறார். ஆனால், கல்யாணத்திற்குச் சற்று முன்னதாக அவருக்கு ஏமாற்றம் தருகிறார் அந்தக் காதலன். ‘எனக்கு இன்னொரு பெண்ணை பிடிச்சிருக்கு’ என்று பெரும் செல்வந்தரின் மகளைத் திருமணம் செய்து கொள்கிறார்.
அந்த சம்பவம், அந்த இளம்பெண்ணை உருக்குலைக்கிறது. மனதளவிலும் உடலளவிலும் ரொம்பவே பாதிக்கப்படுகிறார்.
அதிலிருந்து மீண்டு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். அப்போது, தனது இயல்புக்கு முற்றிலும் எதிராக நிற்கிற ஒரு ஆடவனைச் சந்திக்கிறார்.
அந்த இளைஞன் மீது ஈர்ப்பு ஏற்படுவதை அவரால் உடனடியாக உணர முடிவதில்லை. ஆனால், காலம் அவர்கள் இருவரையும் ஒரே திசையில் பயணிக்க வைக்கிறது.
அந்த இளைஞன் ஒரு இசை நிபுணர். சுயாதீனமாகப் பாடல்களுக்கு இசையமைத்து, கச்சேரிகள் செய்து வருபவர். அவரது இசைக்கேற்ப பாடலொன்றை எழுதும் வாய்ப்பு அப்பெண்ணுக்குக் கிடைக்கிறது.
அந்த பாடலுக்கான ‘கிரெடிட்’ அவர்கள் இருவருக்குமே கிடைக்கவில்லை. பதிலாக, அவர்கள் இருவருக்குள்ளும் காதல் அரும்ப அதுவே காரணமாகிறது.
‘இனியெல்லாம் சுகமே’ என்று இருவரும் கடந்த காலச் சோகங்களை மறந்து எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகையில் ‘இடி’யென ஒரு தகவல் அவர்களைத் தாக்குகிறது.
அந்த பெண் அல்சைமர்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதே அத்தகவல்.
அது தெரிந்தபின்னும் அந்த இளைஞன் அவருக்கு உறுதுணையாக இருந்தாரா? அவர்களது காதலை அந்த பெண் மறக்காமல் இருக்க முடிந்ததா என்று சொல்கிறது ‘சையாரா’வின் மீதி.
காதலில் தோல்வியுற்றவர்களுக்குக் கூட, ஒருதலையாகக் காதலித்தவர்களுக்குக் கூட, அத்தருணங்கள் குறித்த நினைவுகளே வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் துணையாக நிற்கும். அதுவே இல்லை எனும் நிலை வரும்போது, அந்த காதல் என்னவாகும் என்று சொன்ன வகையில் மனம் கவர்ந்திருக்கிறது இப்படம்.
இன்றைய ‘பாஸ்ட்புட்’ யுகத்திலும் இப்படியொரு மென்மையான காதல் கதை வெற்றி பெற்றிருப்பது நிச்சயம் ஆச்சர்யப்படத்தக்க விஷயம் தான்.

சிறப்பான திரையனுபவம்!
’சையாரா’வின் கதையோ, காட்சிகளோ புதிதென்று சொல்ல முடியாது. ‘பிளாக்’ பட பாணியில் மையப்பாத்திரத்திற்கு இருக்கிற ‘அல்சைமர்ஸ்’ பாதிப்பு மட்டுமே ஒரு சாதாரண காதல் கதையைச் சிறப்பானதாக மாற்றியிருக்கிறது.
அதனைப் புரிந்துகொண்டு சிறப்பான காட்சியாக்கத்தைத் தரக் கடுமையாக உழைத்திருக்கிறார் இயக்குனர் மோஹித் சூரி.
ஒளிப்பதிவாளர் விஹாஸ் சிவராமன், படத்தொகுப்பாளர்கள் ரோகித் மக்வானா – தேவேந்திரா மூர்தேஷ்வர், தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் லக்ஷ்மி கெலுஸ்கர் – ரஜத் பொட்டார் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் அதற்குத் துணை நின்றிருக்கின்றனர்.
முக்கியமாக மிதுன், சச்சத் – பரம்பரா, ரிஷப் கந்த், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பக்சி, பஹிம் அப்துல்லா, அர்ஸ்லான் நிசாமி இசையில் அமைந்துள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் நம்மை கிறங்க வைக்கின்றன. ‘ரிப்பீட்’ மோடில் கேட்க வைக்கிற பாடல்களாக அவை உள்ளன.
போலவே, ஸ்டீவர்ட் எடூரியின் பின்னணி இசை காட்சிகளின் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக இருக்கிறது. படத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது.
இன்னும் ஒலி வடிவமைப்பு, நடனம், ஸ்டண்ட், ஆடை வடிவமைப்பு என்று பல அம்சங்கள் ஈர்ப்பை அளிக்கின்றன.
இந்த படத்திற்கான கதை திரைக்கதையை சங்கல்ப் சதானா அமைத்திருக்கிறார். இதன் வசனங்களை ரோஹன் சங்கர் எழுதியிருக்கிறார்.
அதையும் மீறி, இப்படம் ’எ மொமண்ட் டூ ரிமெம்பர்’ (A Moment to Remember) எனும் கொரிய திரைப்படத்தை நினைவூட்டுகிறது. அதிலுள்ள முக்கியமான காட்சிகள் இதில் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.
நாயகனாக அறிமுகம் ஆகியிருக்கும் அஹான் பாண்டே, செயற்கைத்தனம் இல்லாத ஒரு நடிகராகத் தெரிகிறார். அதுவே, அவரை முதல் படத்திலேயே ரசிகர்கள் கொண்டாடக் காரணமாகியிருக்கிறது. இதனைத் தக்க வைக்கும்விதமாக அடுத்தடுத்த படங்களை அவர் தேர்வு செய்ய வேண்டும்.

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’யில் வந்த சாவித்ரி எனும் சுலக்னாவை நினைவூட்டுகிறார் இப்பட நாயகி அனீத் பட்டா. அழகாகத் தோற்றமளிப்பதோடு சிறப்பாக நடிக்கவும் செய்திருக்கிறார். இவருக்கென்று தனி ரசிகர் வட்டம் உருவானதில் ஆச்சர்யமில்லை.
இவர்கள் தவிர்த்து சிலர் நம் கவனம் ஈர்க்கின்றனர். நாயகியின் தாய், நாயகனின் நண்பன் மற்றும் தந்தை, நாயகியின் முன்னாள் காதலன் பாத்திரங்களில் நடித்தவர்கள் வசீகரிக்கின்றனர்.
பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படமாகத் தோற்றம் தந்தாலும், ‘சையாரா’வில் நடித்தவர்கள் எண்ணிக்கை, இதில் வரும் லொகேஷன்கள் குறைவு.
அந்த வகையில் நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட ஒரு நடுத்தர பட்ஜெட் படமாகக் கவனிப்பைப் பெற்றுள்ளது இப்படம். இயக்குனர் மோஹித் சூரியின் இருபதாண்டு கால அனுபவம் அதன் பின்னிருக்கிறது. தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல் இன்றைய தலைமுறையின் இயல்பு வாழ்வைப் பிரதிபலிப்பதிலும் அவர் தன் மேதைமையைக் காட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
தேர்ந்தெடுத்த கதையின் வகைமைக்கு ஏற்பத் திரைக்கதை ‘ட்ரீட்மெண்டை’ முடிவு செய்துவிட்டி, மிக நேர்த்தியாகக் காட்சியாக்கத்தில் கவனம் செலுத்தினால் வெற்றி கிடைக்கும் என்று நிரூபித்திருக்கிறது ‘சையாரா’. கூடவே, ரசிகர்கள் மனதோடு ஒன்றுகிற வகையில் அடிப்படையான உணர்ச்சிகளுக்கு, வாழ்வனுபவங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று உணர்த்தியிருக்கிறது.
இப்படியொரு படம் வெற்றி பெறாமல் போனால்தான் ‘ஏன்’ என்று கேள்வி எழுப்ப வேண்டும்..!