பாமக கட்சி விரோத நடவடிக்கை தொடர்பாக அனுப்பிய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க மீண்டும் ஒருவாரம் கால அவகாசம் அறிவித்துள்ளார் ராமதாஸ்.
பாமக கட்சி விதிகளை முறைகளை மீறியாக கூறி அன்புமணி ராமதாஸுக்கு 16 கேள்விகள் எழுப்பி, அதற்கு விளக்கம் அளிக்க ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கெடு விதித்திருந்தார் ராமதாஸ். ஆனால் அன்புமணி இதுவரை விளக்கம் தரவில்லை.
இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாக குழு கூட்டம் தைலாபுரத்தில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அன்புமணி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிர்வாகக்குழு உறுப்பினர்களோ, ’தபால் மூலம் அன்புமணியின் பதில் பெறப்படுவதால் காலதாமதம் ஆகலாம். எனவே இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கலாம்’ என பரிந்துரைத்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட ராமதாஸ், ’நடவடிக்கை குறித்து 2 நாள் கழித்து செப்டம்பர் 3ஆம் தேதி பேசுவோம்’ எனத் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நமது மின்னம்பலம் தளத்தில் பாமக நிர்வாக குழு கூட்டம் : நடந்தது என்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படி இன்று செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்தார். அப்போது பாமக பொது செயலாளர் முரளி சங்கர் அன்புமணி மீதான நடவடிக்கை குறித்த அறிக்கையை வாசித்தார்.
அதில், “கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்புமணி மீது பொதுக்குழு எழுப்பிய 16 கட்சி விரோத குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை நேரிலோ அல்லது கடிதம் மூலமோ தெரிவிக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் உரிய பதில் அளிக்கவில்லை. எனவே வரும் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் உங்கள் மீது ஏன கட்சி விரோத நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தை தெரிவிக்க வேண்டும். இல்லையேல் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு மற்றும் கட்சி நிர்வாக குழுவின் படி தங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன்மூலமாக தெரிவித்துக் கொள்கிறோம். இதனை 20 உறுப்பினர்கள் அடங்கிய நிர்வாக குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுத்துள்ளோம்” என வாசித்தார்.
தொடர்ந்து ராமதாஸ் பேசுகையில், “பொதுக்குழு எழுப்பிய 16 கட்சி விரோத குற்றச்சாட்டுகளுக்கு இன்னும் அன்புமணி பதில் அளிக்கவில்லை. எனவே பாமக நிர்வாக குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி மீண்டும் ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
அப்போது ‘இந்த ஒருவார காலத்திற்குள் அன்புமணி பதில் அளிக்கவில்லையென்றால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு,
போக போகத் தெரியும்” என வழக்கமான பாடல் மூலம் பதிலளித்தார் ராமதாஸ்…