ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை குறைத்துள்ள நிலையில் பொதுமக்கள் வங்கிகளில் வாங்கும் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையும்.
ரிசர்வ் வங்கி பணவியல் கொள்கை கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தால், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையும். இதனால், வீட்டுக் கடன் மற்றும் பிற கடன்களுக்கான மாதத் தவணை (EMI) சற்று குறையும்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ விகிதத்தைக் குறைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து சூசகமாகத் தெரிவித்திருந்தார். அதன்படியே தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற பணவியல் கொள்கைக் குழு (MPC) கூட்டத்திலேயே வட்டி விகிதம் குறைக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டுப் பேசினார். இந்த ஆண்டின் முதல் பாதியில் மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் (basis points) வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. ஆனால், ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தற்போது பணவீக்கம் மிகக் குறைந்த அளவில் உள்ளது. அக்டோபர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 0.25% ஆகக் குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை வீழ்ச்சி, ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் விநியோகச் சங்கிலி மேம்பாடுகள் ஆகியவை இதற்குக் முக்கிய காரணங்கள் ஆகும். பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருப்பதால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.
ரிசர்வ் வங்கி தனது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி மதிப்பீட்டை 6.8% ஆக உயர்த்தியுள்ளது. அதே சமயம், நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) மதிப்பீட்டை 2.6% ஆகக் குறைத்துள்ளது.
பொருளாதார நிலை சீராக இருப்பதால், சந்தை வல்லுநர்கள் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதக் குறைப்பை எதிர்பார்த்தனர். மோர்கன் ஸ்டான்லி உள்ளிட்ட பல நிதி நிறுவனங்களும் இதே போன்ற கணிப்புகளை வெளியிட்டன.
கவர்னரின் அறிவிப்புக்குப் பிறகு 10 ஆண்டு அரசுப் பத்திரங்களுக்கான வருவாய் சற்று குறைந்தது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்தும் கவர்னர் விளக்கமளித்தார். நாட்டின் பொருளாதாரம் வளரும்போது, ரூபாயின் மதிப்பு ஆண்டுக்கு 3-3.5% வரை குறைவது இயல்பு என்று அவர் கூறினார்.
தேவைப்படும்போது மட்டுமே ரூபாயின் மதிப்பைச் சீராக்க ரிசர்வ் வங்கி தலையிடும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது ரூபாயின் மதிப்பு ஆசிய நாடுகளின் நாணயங்களில் பலவீனமாக இருந்தாலும், அதை ஆர்பிஐ கவனமாகக் கட்டுப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ஆர்பிஐ கடன் கொடுக்கும் வட்டி விகிதமாகும். இந்த விகிதம் குறைந்தால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் கடன்களுக்கான வட்டியும் குறையும். எனவே மக்கள் வாங்கும் பல்வேறு கடன்களுக்கான வட்டியும் குறையும்.
