ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம்; B பிரிவில் ஆப்கான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன.
8 அணிகளும் தங்களது பிரிவுகளில் உள்ள அணிகளுடன் மோத வேண்டும். இதில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் 4 அணிகள் சூப்பர் சுற்று தகுதிக்கு முன்னேறும்.
இன்று (செப்டம்பர் 14) 6-வது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. முந்தைய ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியிருந்தது.
ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் அப்பாவி பொதுமக்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் படுகொலை செய்தது, இதற்கு எதிராக இந்தியா ஆபரேசன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது என இந்தியா- பாகிஸ்தான் உறவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருநாட்டு கிரிக்கெட் அணிகளும் மோதும் இன்றைய ஆட்டம் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.
பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் அணி விளையாடுவதற்கு எதிராக மஜ்லிஸ் கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால் இந்த போட்டிக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.