ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று (ஆகஸ்ட் 31) சந்தித்து பேசினார். 7 ஆண்டுகளுக்கு பின் சீனா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
நடப்பாண்டு ஷாங்காய் உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு சீனா அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் எல்லை பிரச்சனைகள், அமெரிக்காவின் வரி விதிப்பு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்த சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி, “உங்களது அன்பான வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு, கசானில் மிகவும் அர்த்தமுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது. இது நமது இருதரப்பு உறவுகளுக்கு நேர்மறையான பாதையை அளித்தது. எல்லையில் போர் நிறுத்தத்திற்குப் பிறகு அமைதியும் ஸ்திரத்தன்மையும் கொண்ட சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதி மேலாண்மை குறித்து நமது சிறப்பு பிரதிநிதிகள் ஒரு புரிதலை எட்டியுள்ளனர். கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகளும் தொடங்கப்படுகின்றன. நமக்கு இடையேயான ஒத்துழைப்பு நமது இரு நாடுகளின் 280 கோடி மக்களின் நலன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து மனிதகுலத்தின் நலனுக்கும் வழி வகுக்கும். பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நமது உறவுகளை மேலும் வலுப்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெற்றிகரமான தலைமைப் பொறுப்பை சீனா வகித்ததற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன். சீனாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்ததற்கும் இன்றைய கூட்டத்திற்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
சீனா அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில், தென்னாசியாவின் மிக முக்கிய நாடுகள் இந்தியாவும் சீனாவும். இரு நாடுகளுமே பழமையான நாகரிகத்தைக் கொண்டவை. நாம் ஒருவரை ஒருவர் வெற்றி பெற வைக்கக் கூடிய நட்பு சக்திகளாக இருக்க வேண்டும். டிராகன் சீனாவும் யானை இந்தியாவும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றார்.
முன்னதாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா- ஜப்பான் பொருளாதார மன்றத்தில் உரையாற்றினார்.