கடந்த 2 மாதங்களுக்கு முன் நண்பனைக் கொலை செய்து கிணற்றில் வீசிய 2 பேர் தற்போது போலீசில் சரணடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மகன் பாலமுருகன். டேவிட் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் வேலை செய்து வருவதால் குடும்பத்துடன் அப்பகுதியில் தங்கி உள்ளார். இதற்கிடையில் பாலமுருகன் கொலை, திருட்டு போன்ற குற்ற வழக்குகளில் கைதாகி நெல்லை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது பாலமுருகனுக்கும் பாளையங்கோட்டையைச் சேர்ந்த முருகப்பெருமாள் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் பாலமுருகனுக்கு போன் செய்த முருகப்பெருமாள் தனக்கும் தனது நண்பர் ஜெயராமனுக்கும் கோவையில் வேலை வாங்கி தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாலமுருகன் அவர்களை கோவை கிளம்பி வருமாறு கூறி உள்ளார். முருகப்பெருமாளும், ஜெயராமனும் கோவை வந்த நிலையில் 3 பேரும் சேர்ந்து குதிரை பண்ணை பகுதியில் மது அருந்தி உள்ளனர். அப்போது முருகப் பெருமாளுக்கும், ஜெயராமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் முருகப்பெருமாள் தாக்கியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து முருகப்பெருமாளும், பாலமுருகனும் இணைந்து ஜெயராமன் உடலில் கல்லை கட்டி அருகில் இருந்த கிணற்றில் வீசியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு பின் இன்று பாலமுருகனும், முருகப்பெருமாளும் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணையைத் துவக்கி உள்ளனர். மேலும் கிணற்றில் வீசப்பட்ட ஜெயராமன் உடலை கைப்பற்றவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.