இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தங்கம் அணிவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் தங்கம் விலை நாள்தோறும் புது உச்சத்தை எட்டி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 80 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
இது வரும் நாட்களில் பெரிதாக குறைவதற்கு வாய்ப்பு இல்லை. மென்மேலும் தங்கம் விலை அதிகரிக்கக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கு காரணம் உலக சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிக்க துவங்கி உள்ளது. போர் பதற்றங்கள், பண வீக்கம் போன்ற பல காரணங்களால் முதலீட்டாளர்களின் பார்வை கடந்த சில ஆண்டுகளாகவே தங்கத்தின் பக்கம் திரும்பி உள்ளது.
மேலும் இந்தியாவிலும் தங்கம் என்பதை வெறும் ஆபரணமாக பார்த்த மனநிலை மாறி மக்கள் தற்போது முதலீடாக பார்க்க துவங்கி உள்ளனர்.
அதனால் தான் தங்க ஆபரணங்களை வாங்குவது போலவே இப்போது மக்கள் தங்கம், வெள்ளி காசுகள், பார்கள், தங்க பத்திரங்களில் முதலீடு செய்யவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் இன்றளவும் பெண்களின் திருமணங்களில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதனால் தங்கம் விலை உயர்வு ஏழை எளிய நடுத்தர மக்களிடையே கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
9 கேரட் தங்கத்திற்கு ஹால்மார்க்
தங்கம் விலை வரலாறு காரணாத உச்சத்தை அடைந்து வரும் நிலையில் ஒரு பவுன் நகை கூட வாங்க முடியாதோ என்ற அச்சம் ஏழை, எளிய பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சூழலில் மத்திய அரசின் இந்திய தரநிலைகள் பணியகத்தின் (BIS) கட்டாய ஹால்மார்க்கிங் முறையின் கீழ் 9 கேரட் தங்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு முன் 24 கேரட், 22 கேரட், 20 கேரட், 18 கேரட், 14 கேரட், தங்கத்திற்கு ஹால்மார்க் அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 9 கேரட் தங்கத்திற்கு ஹால்மார்க் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தூய்மை தன்மை
24 கேரட்டில் 99.9% தூய்மையான தங்கம் இருக்கும். ஆனால் இதில் ஆபரணங்களை செய்ய இயலாது. இதை முதலீட்டு அடிப்படையில் தங்க கட்டிகளாக வாங்கி சேமிக்க மட்டுமே உதவும். இதற்கு அடுத்த நிலையில் உள்ள 22 கேரட்டில் 91.6% தங்கமும், 8.4%அளவிற்கு பிற உலோகங்களும் இருக்கும். 22 கேரட் ஆபணர தங்கத்திற்கு 916 ஹால் மார்க் முத்திரை வழங்கப்படும். இந்தியாவை பொருத்தவரை 22 கேரட் ஹால்மார்க் தங்கத்தைதான் பெரும்பாலான மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
இதேபோல் 20 கேரட்டில் 83.3% தூய தங்கமும், 16.6% சதவிகிதம் பிற உலோகங்களும் இருக்கும். இதற்கு 833 ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. 18 கேரட்டில் 75% தூய தங்கமும், 25% பிற உலோகங்களும் இருக்கும் நிலையில் 750 ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது.
இதேபோல் 14 கேரட்டில் 58.33% தூய தங்கமும், பிற உலோகங்கள் 41.66% இருக்கும். இதற்கு 583 ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. மேலும் 9 கேரட்டில் 37.5% தங்கமும், 62.5% பிற உலோகங்களும் இருக்கும். இதற்கு 375 ஹால்மார்க் முத்திரை வழப்பட்டுள்ளது.
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 80 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் இந்த 9 கேரட் தங்கத்திற்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ளது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
9 கேரட் தங்கத்தின் சாதகம்
22 கேரட் ஆபரண தங்கம் இன்றைய தேதியில் ஒரு கிராம் 10,005க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் ஒரு கிராம் 9 கேரட் தங்கம் சுமார் 4,100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் எளிய மக்களின் தங்க நகை கனவும் நிறைவேற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தங்கத்தை மீண்டும் விற்பனை செய்யும் போதும் அன்றைய விலையில் விற்று கொள்ளலாம் என்பது சாதகமாக பார்க்கப்படுகிறது.
அடகு வைப்பதில் சிக்கலா?
பொதுவாக குடும்பங்களில் பொருளாதார ரீதியில் சிறிய சிக்கல் என்றாலோ, தொழில் முதலீடு உள்ளிட்ட எந்த நெருக்கடியாக இருந்தாலும் பணம் தேவைப்படும் நிலையில் ஆபத்பாந்தவனாக உதவுவது தங்க நகைதான். குறிப்பாக பெண்கள் நகை சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதற்கு இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த 9 கேரட் தங்கத்திற்கு வங்கிகளில் லோன் கொடுப்பது எந்த அளவு சாத்தியம் என்பது இதுவரை தெளிவாகவில்லை. காரணம் குறிப்பிட்ட சில வங்கிகளை தவிர இங்குள்ள பெரும்பாலான வங்கிகளில் இன்று வரை 18 கேரட் நகைகளுக்கே கூட நகைக்கடன் வழங்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.
அதேபோல் ஆசைக்காக நகை அணியும் பட்சத்தில் இந்த தங்க நகை முழுமையாக மஞ்சள் நிறத்தில் இல்லாமல் சற்றே மங்கலான நிறத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் தங்கத்தின் விலை உயர்வால் தற்போது 9 கேரட் தங்க நகைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ரகுநாதன் சுப்பையா மின்னம்பலம்.காம்-மிடம் கூறுகையில் “கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக தமிழகத்திலேயே முதல் முறையாக 9 கேரட் தங்க மோதிரம் தயாரித்து சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம். அடுத்ததாக தோடு, செயின் போன்ற ஆபரணங்களை செய்ய உள்ளோம். விலை குறைவு என்ற காரணத்தால் 9 கேரட் நகையை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இந்த 9 கேரட் தங்கத்தில் நுணுக்கமான டிசைன்கள் செய்வது கொஞ்சம் சிரமம்தான். 9 கேரட் தங்கத்தில் தாமிரம், துத்தநாகம் போன்ற உலோகங்கள் சேர்க்கப்படுகிறது. இதனால் கர்ப்பிணிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக எனர்ஜி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
குறிப்பாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் கிப்ட் வழங்குவது போன்ற காரணங்களுக்கு 9 கேரட் தங்கம் மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த 9 கேரட் தங்க நகையை பயன்படுத்திய பின் விற்க விரும்பினால் அன்றைய சந்தை விலையில் விற்கலாம் . அதே சமயம் 9 கேரட் தங்கத்தை அடகு வைப்பதில் சில சிக்கல் உள்ளது என்பது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார்.