அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்கிற செங்கோட்டையனின் முடிவு குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிதான் முடிவெடுப்பார் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
இந்தநிலையில் செங்கோட்டையனின் பேட்டி குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் நாயினார் நாகேந்திரன்
உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்முறையாக கூட்டணி குறித்து பேசும் போதே, அது உட்கட்சி பிரச்சினை. அதைபற்றி அவர்கள்தான் பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
என்னை பொறுத்தவரை எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை நிச்சயமாக அகற்ற முடியும். எல்லோரும் சேர வேண்டும் என்று சொல்வது நல்ல விஷயம் தானே. ஒன்றிணைவது பற்றி எடப்பாடி தான் பேச வேண்டும். தேவைப்பட்டால் நாங்கள் பேசுவோம்.
ஆரம்ப காலத்தில் இருந்து எல்லோருமே இணைய வேண்டும் என சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. தேர்தலுக்கு 7 மாதங்கள் உள்ளது. கடைசி ஒரு மாதத்தில் கூட அதிகமான மாற்றங்கள் வரும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். நிச்சயமாக நல்லது நடக்கும். திமுகவை தவிர்த்து அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும். அனைவரும் வரவேண்டும்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
இது அதிமுக உட்கட்சி விவகாரம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. ஒன்று சேர்ந்தால் வரவேற்கக்கூடிய விஷயம். இதற்கு மேல் இதில் நான் எதுவும் சொல்ல முடியாது.
விசிக தலைவர் திருமாவளவன்
அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர் இன்று மனம் திறந்து பேசப் போவதாக சொன்னார். ஆனால் முழுமையாக மனம் திறக்கவில்லை என்பது அவரது பேட்டி மூலம் தெரியவருகிறது. யார் யாரை சேர்க்க வேண்டும் என்று அவர் வெளிப்படையாக சொல்லியிருக்கலாம். அதிமுகவை திராவிட இயக்கம், பெரியார் இயக்கம் என்ற முறையில் விசிக பெரிதும் மதிக்கிறது.