சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதிமுக- பாஜக கூட்டணியில் சலசலப்பு இருந்து வருகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என அதிமுகவிலேயே கலகக் குரல் வெடித்துள்ளது. டெல்லியில் தம்மை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் இதனை வலியுறுத்தி இருந்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸை மீண்டும் கட்சியில் சேர்க்கவே முடியாது என திட்டவட்டமான நிலைப்பாட்டை கூறி வருகிறார். டெல்லியில் அமித்ஷாவிடமும் இதனை தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
இதனிடையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் வெளியேறுவதாக அறிவித்தனர். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என சொல்லிவிட்டு கூட்டணியில் இருந்து வெளியேறினார் டிடிவி தினகரன். பாஜக தலைமை தம்மை புறக்கணிப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓபிஎஸ்.
இந்த பின்னணியில் டிடிவி தினகரனையும் ஓபிஎஸ்ஸையும் மீண்டும் பாஜக கூட்டணியில் கொண்டு வருவதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை முயற்சித்து வருகிறார். இதேபோல ஓபிஎஸ்ஸுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிவருகிறார்.
இதனிடையே சேலத்தில் இன்று (செப்டம்பர் 21) எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அதிமுக- பாஜக கூட்டணியில் உள்ள குழப்பங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.