தேர்தலில் போட்டியிட்டு ‘டெபாசிட்’ தொகையை கூட தக்க வைக்க முடியாத தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தம்மை அடுத்த பிரதமர் என நினைத்து கொண்டிருக்கிறார் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே சாடியுள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கடந்த வாரம் அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது, “மும்பை மகாராஷ்டிராவின் ஒரு பகுதி அல்ல.. மும்பை ஒரு சர்வதேச நகரம்” என கூறியிருந்தார்.
இதற்கு மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரே சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தன.
உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், “மும்பைக்குள் அண்ணாமலை கால் வைத்தால் அவரது காலை வெட்டுவோம்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு பதில் தந்த அண்ணாமலை, “மும்பைக்கு நான் வருகிறேன்.. முடிந்தால் என் கால்களை வெட்டுங்கள்” என சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில் மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்ய தாக்கரே, பாஜகவில் அண்ணாமலை ஒரு ஜீரோ. தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் தொகையை கூட தக்க வைக்க முடியாதவர்.
தம்மை அடுத்த பிரதமர் என முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை. தமிழ்நாடு என்பது வேறு.. மகாராஷ்டிரா என்பது வேறு. மும்பையை பற்றி இங்கே வந்து எங்களிடம் அண்ணாமலை சொல்வாரா? மகாராஷ்டிரா வை அண்ணாமலையும் மும்பையும் இழிவு செய்துவிட்டனர். இதை மகாராஷ்டிரா மக்கள் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்” என்றார்.
