தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி தவெக தேர்தல் பிரச்சாரா மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனுவை குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு அனுப்பி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில், இலங்கை நேபாளம் நாடுகளைப் போல ஜென் இசட் புரட்சி ஏற்படும் என்று பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவு கலவரத்தை தூண்டும் வகையில் இருந்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதவ் அர்ஜுனா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், 34 நிமிடங்களில் சமூக வலைதள பதிவுகளை நீக்கிவிட்ட நிலையில் அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் அந்த பதிவை போடவில்லை. காவல்துறை தன்மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் முன்பு இன்று (அக்டோபர் 27) விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனுவை குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள் மனுவை நவம்பர் 5ஆம் தேதிக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டனர்.
அதன்படி இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு வரும் நவம்பர் 5ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
