கரூரில் நடிகர் விஜய்யின் தவெக பரப்புரை கூட்டம் நேற்று நடந்த நிலையில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை முதல் சம்பவ இடத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து பிற்பகலில் விஜய் பிரச்சார கூட்டத்தில் நடந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழக வெற்றிக் கழக கூட்டம் நடத்த ரவுண்டானா, அல்லது உழவர் சந்தை பகுதிகிளில் அனுமதி கேட்டனர். ரவுண்டானாவின் ஒரு பகுதியில் பெட்ரோல் பங்க், மற்றொரு பக்கம் அமராவது ஆறும் பாலமும் உள்ளது.
அங்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து வேலுச்சாமி புரம் பகுதியில் அனுமதி கேட்டு தவெகவினர் கொடுத்த பெட்டிஷன் அடிப்படையில் அந்த இடம் ஒதுக்கப்பட்டது.
காவல் துறை பாதுகாப்பு முறையாக வழங்கப்பட்டது. இங்கு 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் 3 ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பி, 17 இன்ஸ்பெக்டர், 58 சப் இன்ஸ்பெக்டர்கள் என மொத்தமாக 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தவெக பரப்புரை கூட்டங்கள் நடந்த அரியலுரில் 287 காவலர்களும், பெரம்பலூரில் 480காவலர்களும், நாகபட்டிணம் மாவட்டத்தில் 410 காவலர்களும், திருவாரூரில் 413 காவலர்களும், நாமக்கல்லில் 279 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாமக்கல்லில் கூட நேற்று இதேபோல் ஹீட் ஸ்ட்ரோக்கால் 34 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.
ஆம்புலன்ஸ் சர்ச்சை குறித்து பேசுகையில், கூட்டத்திற்கான முன்னேற்பாடாக இரண்டு ஆம்புலன்ஸ் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் தகவலின் அடிப்படையில் தான் ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.
தவெக தரப்பில் கல் வீச்சு சம்பவம் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினரின் விசாரணையில் கல்வீச்சு சம்பவம் எதுவும் நடந்ததாக தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.