நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் (செப்டம்பர் 12) விசாரணை நடைபெற உள்ளது.
தம்மை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்தார் சீமான் என்பது 2011-ல் போலீசில் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார். இதனடிப்படையில் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை பிப்ரவரி 21-ந் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீமான், மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சீமான் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. அப்போது நடிகை விஜயலட்சுமியுடன் சமாதானமாக போவதாக சீமான் தரப்பில் கூறப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இதனிடையே சீமானுடன் சமாதானமாக போக தயாராக இல்லை என உச்சநீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 12-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.