பொம்பள சிவாஜி என்று அழைக்கப்பட்ட மாபெரும் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகை ஆச்சி மனோரமா. தன்னோடு நாடகங்களில் உடன் நடித்தவரும் சில படங்களில் ஹீரோவாக நடித்தவருமான எஸ்எம் ராமநாதனை காதலித்து மணந்து, மண வாழ்வில் பல சித்திரவதைகளுக்கு ஆளானவர்.
1964 இல் திருமணம் நடந்து, இரண்டே வருடத்தில் கணவன் மனைவிக்குள் மணமுறிவு ஏற்பட்டது. இப்போது காலமாகி இருக்கும் பூபதி அப்போது பிறந்து பதினைந்து நாளே ஆன குழந்தை. அதன் பின்னர் மனோரமா தன் மகன் பூபதியையே தனது குடும்ப வாழ்வின் ஆணிவேராகக் கருதினார். மகனே உலகம் என்று இருந்தார்.
தன் மகன் பூபதியை சினிமாவில் எப்படியாவது ஹீரோவாக ஆக்கி விட வேண்டும் என்று தன்னால் இயன்றவரை முயன்றார். ஆனால் காலம் ஆச்சிக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை.
எனினும் விசுவின், ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் ரஜினி ரசிகராக அறிமுகமானார் பூபதி. மனோரமா நடித்த நான் பெத்த மகனே என்ற படத்தில் பூபதியும் நடித்து இருந்தார். சிவாஜியோடும் ஒரு படம்… மனோரமா நடித்த காட்டுப்பட்டி சத்திரம் தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். மேலும் ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க முடிந்தது.
ராமநாதன் 1990 ஆண்டு மரணமடைய, 2015 ஆண்டு அக்டோபர் பத்தாம் நாள் மறைந்தார் மனோரமா. சில கேள்விகள் விடை தெரியாதவை. சில தோல்விகள் புதிரானவை. சில சோகங்கள் சொல்லி முடியாதவை.
சென்னை தி.நகரில் நீலகண்ட மேத்தா தெருவில் வசித்து வந்த பூபதி தனது எழுபதாவது வயதில் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். அம்மா இறந்து பத்து வருடம் 13 நாள் இடைவெளியில் பூபதி மறைந்து இருக்கிறார் பூபதி.
ஒரு முறை மனோரமா சொன்னது நினைவுக்கு வருகிறது. “என் அம்மா நான் டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் நான் ஆக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் விருப்பமே ஜெயித்தது. ஆனால் அம்மா இறந்த போது அம்மாவின் ஆசையை நிறைவேற்றாமல் போய் விட்டோமே என்று வருந்தினேன். ஆனால் எந்த வருத்தம் மறைந்தது, என் பேரன் (பூபதியின் மகன்) டாக்டர் ஆனபோதுதான்” என்றார் மனோரமா.
பூபதியின் மூத்த மகன் ராஜராஜன் எம்எஸ் ஆர்த்தோ டாக்டர். மூத்த மகள் அபிராமி எம எஸ் சி பிசியாலஜி, இளைய மகள் மீனாட்சி எம் ஃபில் படித்தவர்.
மனோரமாவின் உயிர், உயிரிழந்து விட்டது.
-ராஜ திருமகன்
