ஒருவரின் உடல் அல்லது தோற்றத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிவைக்கும் கேள்விகள் எந்த சூழலிலும் தவறுதான் என அதர்ஸ் பட நடிகை கௌரி கிஷன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கௌவுரி கிஷன் நடிப்பில் ‘அதர்ஸ்’ திரைப்படம் நேற்று (நவம்பர் 7) வெளியாகி உள்ளது. படம் வெளியாகுவதற்கு முந்தைய நாள் (நவம்பர் 6) செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது உடல் எடை குறித்த செய்தியாளரின் கேள்விக்கு கௌரி கிஷன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தொடர்ச்சியாக செய்தியாளர் அதே தொனியில் உரத்த குரலில் பேசிய போதும், கௌவுரி கிஷன் தனது கருத்தில் உறுதியாக இருந்தார். இதுகுறித்த செய்திகள் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகைகள் குஷ்பு, ரோகிணி, மஞ்சுமா மோகன், இயக்குநர் ரஞ்சித், மாரி செல்வராஜ், பிரேம் குமார், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கௌரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நடிகர் சங்கமும் தனது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தோற்றம் குறித்த கேள்வி எந்த சூழலிலும் தவறுதான் என நடிகை கௌரி கிஷன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து கௌரி கிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்த வார தொடக்கத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், எனக்கும் ஒரு யூடியூபருக்கும் இடையே எதிர்பாராத விதமாக பதற்றமான உரையாடல் நடந்தது.
இதன் பின்னணியில் உள்ள பெரிய பிரச்சினையை ஒப்புக்கொள்வது முக்கியம் என்று நினைக்கிறேன், அதன் மூலம் கலைஞர்களுக்கும் ஊடகங்களுக்கும் இடையில் எந்த விதமான உறவை நாம் உருவாக்க விரும்புகிறோம் என்பது குறித்து நாம் அனைவரும் சேர்ந்து சிந்திக்க முடியும்.
பொது மக்களின் கவனத்தில் இருப்பவராக, விமர்சனங்கள் என் தொழிலின் ஒரு பகுதி என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால், ஒருவரின் உடல் அல்லது தோற்றத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிவைக்கும் கருத்துகள் அல்லது கேள்விகள் எந்த சூழலிலும் தவறானவை.
நான் கலந்து கொண்ட நிகழ்வில் என் படம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அங்கு நான் இருந்ததே அதற்காகத்தான். ஒரு ஆண் நடிகரிடம் அதே கேள்வியை, அதே ஆக்ரோஷமான தொனியில் கேட்டிருப்பார்களா என்று தோன்றுகிறது. அந்த கடினமான சூழலில் தைரியமாக நின்றது எனக்கு பெருமையாக உள்ளது; இது எனக்கு மட்டுமல்ல, இதே அனுபவத்தை சந்தித்த அனைத்து பெண்களுக்கும் முக்கியமானது. இது புதிதல்ல, ஆனால் இன்னும் நிலவுகிறது – உடல் அவமதிப்பை நகைச்சுவையாக்குவது, யதார்த்தமற்ற அழகு தரங்களை தொடர்ந்து திணிப்பது வழக்கமாகி விட்டது. இதுபோன்ற உணர்வுகளை அனுபவித்தவர்களுக்கு இது ஒரு நினைவூட்டலாக அமையும் என்று நம்புகிறேன்.
நாம் பேச உரிமை உடையவர்கள். நமது அசௌகரியத்தை வெளிப்படுத்த உரிமை உடையவர்கள், தவறு நடந்தால் கேள்வி கேட்க உரிமை உள்ளவர்கள், இந்த நிலையை முடிவுக்கு கொண்டு வர முயல வேண்டிய பொறுப்பு நமக்கே உள்ளது.
அதேசமயம் நான் ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். இதில் சம்பந்தப்பட்ட நபரை தாக்கவோ, அவமதிக்கவோ அல்ல.. மாறாக இந்த தருணத்தை ஒரு வாய்ப்பாக எடுத்து கொண்டு இரக்கம், உணர்வுப்பூர்வமான மரியாதை ஆகியவற்றோடு முன்னேறிச் செல்ல பயன்படுத்துவோம்.
எனக்கு கிடைத்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட சென்னை பத்திரிகையாளர் சங்கத்திற்கும், AMMA சங்கத்திற்கும் (மலையாள திரைத்துறை), தென் இந்திய நடிகர் சங்கதிற்கும் நன்றி. பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும், பொதுமக்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி. என்னுடன் தொடர்பு கொண்டு ஒற்றுமையாக நின்ற துறையில் உள்ள அனைவருக்கும் என் சமகாலத்தவர்கள், சக ஊழியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.
