கே. பாலச்சந்தர் இயக்கி, மம்முட்டி நடித்த அழகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் விக்ராந்த். அடுத்து ஆர் வி உதயகுமார் இயக்கிய கற்க கசடற படம் மூலம் இருபது வருடம் முன்பு ஹீரோ ஆனார்.
நல்ல நடிகர். உழைப்பாளி. அன்பானவர்.. பண்பானவர் விக்ராந்த். விஜய்யின் உறவினர் என்ற போதும் சினிமாவில் அவருக்கு உரிய உயரம் இன்னும் வரவே இல்லை.
நினைத்து நினைத்து பார்த்தேன், முதல் கனவே, எங்கள் ஆசான், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக சட்டப்படி குற்றம் உள்ளிட்ட பல படங்களில் பாண்டி நாடு, தாக்க தாக்க , கவண், சுட்டுக் பிடிக்க உத்தரவு, போன்ற படங்களில் நடித்தும் அவருக்கு இன்னும் ஒரு பிரேக் அமையவில்லை. எனினும் தொடர்ந்து போராடும் குணமும் உழைப்பும் நிறைந்தவர் .தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதே இல்லை.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீகின் முக்கியமான கிரிக்கெட் வீரர் கூட . அப்புறம் அவருக்கு ‘ LBW’ கிடைத்ததில் ஆச்சரியம் என்ன?
‘ LBW’ ?
நடிகர் விக்ராந்த் நடிப்பில் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவாகியுள்ள புதிய வலைதளத் தொடர் ‘LBW – அதாவது லவ் பியாண்ட் விக்கெட்’
’ஹார்ட்பீட்’, ’போலீஸ் போலீஸ்’ மற்றும் ’ஆஃபீஸ்’ போன்ற லாங்-ஃபார்மேட் வெப் சீரிஸ்களைத் தொடர்ந்து தற்போது கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற புதிய வெப்சீரிஸை ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் அறிமுகப்படுத்துகிறது. ’ஹார்ட்பீட்’ வெப்சீரிஸை தயாரித்த அட்லீ ஃபேக்டரி தயாரித்திருக்கும் இந்தத் தொடர் மூலம் நடிகர் விக்ராந்த் ஓடிடி தளத்தில் அறிமுகமாகிறார். ஜனவரி 1, 2026 முதல் LBW ப்ரீமியர் ஆகிறது.
அருணா ராக்கி திரைக்கதை எழுதியிருக்க கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ், அயாஸ் கான், அக்ஷதா, நவீன், நிகில் நாயர் மற்றும் விஸ்வ மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தத் தொடர் குறித்து நடிகர் விக்ராந்த் , ” எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டுடன் ஓடிடி தளத்தில் அறிமுகமாவது இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. கிரிக்கெட் எப்போதும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. கிரிக்கெட்டுடன் இருக்கும் ஆழமான தொடர்பை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்த LBW எனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நிச்சயம் பார்வையாளர்களுக்கும் இது பிடித்தமானதாக இருக்கும்” என்றார்.
ஒரு காலத்தில் நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரனாக இருந்த ரங்கனின் கரியரில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் போகிறது. இப்போது பயிற்சியாளராக இருக்கும் ரங்கன், போராடும் கிரிக்கெட் அகாடமியில் ஒரு பின்தங்கிய அணியைப் பயிற்றுவித்து அதன் இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பணியை மேற்கொள்கிறார். கிரிக்கெட்டின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தத் தொடரில் விளையாட்டு, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் லட்சியத்தோடு இரண்டாவது வாய்ப்புக்காகப் போராடுவதன் உண்மையான அர்த்தத்தை களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் படம்பிடித்து காட்ட இருக்கிறது இந்தத் தொடர். (ஆனா இது மாதிரி ஆயிரம் வெப் சீரிஸ்கள் , சினிமாக்களை பறிச்சு அடிச்சு உடைச்சு சலிச்சு கழுவிக் களைந்து சமைச்சு மென்னு தின்னு துப்பியாச்சுங்களே)
— ராஜ திருமகன்
