போதைப் பொருட்கள் வழக்கத்தில் இருப்பது பேராபத்து. இதனால் நம் வம்சமே இல்லாமல் போய்விடும். இனம், அடையாளம் எல்லாம் அழிக்கப்படும் என நடிகர் ரஞ்சித் கவலை தெரிவித்துள்ளார். actor ranjith strong voice against drug abuse
போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கில் திரையுலகைச் சேர்ந்த மேலும் சில நடிகர், நடிகைகள் கைதாகலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூரில் இன்று (ஜூன் 29) செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித்திடம், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்…
அதற்கு அவர், “நடிகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் இந்த விசயம் உடனுக்குடன் வெளியே தெரிகிறது. அது உண்மையில் வருத்தம் தான். இதை வாங்கி பயன்படுத்திவர்கள் மீது இருக்கும் வருத்தத்தை விட, இதை விற்பவர்கள் இன்னும் ஜம்முனு இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் பல லட்சம் கோடிகள் இந்த வியாபாரத்தில் புழங்குகிறது. இந்தியா போன்ற ஆன்மீக பூமியில் போதைப் பொருட்கள் வழக்கத்தில் இருப்பது பேராபத்து. போதையால் ஒரு குடும்பமே அழிந்துவிடும். இதனால் வம்சமே இல்லாமல் போய்விடும். இனம், அடையாளம் எல்லாம் அழிக்கப்படும்.
பள்ளி கல்லூரிகள் வரை இந்த போதைப் பொருட்களின் புழக்கம் வந்துவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஹாஸ்டலுக்குள் சென்று பார்த்தால் அங்கிருக்கும் சின்ன சின்ன பொருட்களை வைத்து பார்க்கும்போது நமது குழந்தைகள் எந்த நிலைமையில் உள்ளார்கள் என்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது. ஜல்லிகட்டுக்காக நாம் எல்லோரும் எப்படி போராடினோமோ, அதேபோல் போதைக்கு எதிராகவும் நாம் எல்லோரும் இணைந்து போராட வேண்டும்.
டாஸ்மாக்கில் சத்து டானிக்கா விற்கிறார்கள்?
நான் இன்னொரு விசயத்தையும் பேசுகிறேன். இந்த கொக்கைன் மட்டும்தான் போதைப் பொருளா? தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக்கில் சத்து டானிக்கா விற்கிறார்கள்? அதை தினமும் வாங்கிக் குடித்தால் உடலுக்கு நல்லதா? அதுவும் போதைதான். புகைப்பிடப்பதால் காற்று மண்டலம் பாதிப்புள்ளாகிறது. நுரையீரல் கெட்டுப் போகிறது.
போதை என்பது இன்று முழுக்க முழுக்க வியாபாரம் ஆகிவிட்டது. இது பேராபத்தானது. இதுதான் நம்மூரில் நடந்துவரும் போர். அரசு இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த போதைப் பொருள் வியாபாரத்தில் யாரெல்லாம் உள்ளார்கள்? அவர்களுக்குப் பின்னால் யாரெல்லாம் உள்ளார்கள் என்பது குறித்து நமக்கு இதுவரை தெரியவில்லை. ஆனால் அரசாங்கம் நினைத்தால் இதனை தடுக்க முடியும். காவல்துறை நினைத்தால் குற்றவாளிகளை பிடிக்க முடியும். அரசு செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
போதை நடிகர்கள் நடிக்க கூடாதா?
நான் போதை பார்ட்டிகளுக்கு இதுவரை சென்றதில்லை. அதற்காக பார்ட்டிகளுக்கு செல்பவர்கள் எல்லாம் கொக்கைன் பயன்படுத்துவார்கள் எனக் கூறினால், அது தவறு. கொக்கைன் பயன்படுத்தாதவர்கள் கூட அந்த பார்ட்டிக்கு சென்றிருக்கலாம்.
கொக்கைனைப் பயன்படுத்தியவர்களை காலத்திற்கும் நடிக்க வைக்க கூடாது எனக் கூறினால், சைக்கிள், டீக்கடை வைத்து கூட பிழைத்துக் கொள்ள முடியும். ஆனால் நீங்கள் போதைக்கு அடிமையாகி இறந்து விட்டால், குடும்பம் இல்லாமல் போகிவிடும், வம்சமே அழிந்துவிடும்.
போதைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வது கடினம். போதைப் பொருட்களே இல்லை என்றால் அவர்கள் அமைதியாக இருப்பார்கள் தானே? கொரோனா காலத்தில் சில பொருட்கள் இல்லை எனும்போது, இருக்கின்ற பொருட்களை வைத்து வாழ்ந்தோமே அதுபோல இருக்க வேண்டும். இந்த போதைப் பொருள் விவகாரத்தில் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.