வடகிழக்கு டெல்லியில் 2020 ஆம் ஆண்டு நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான போராட்டங்களின் போது வெடித்த வன்முறை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) முன்னாள் மாணவர்கள் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், ஃபாத்திமா, மீரான் ஹைதர் ஆகியோரின் ஜாமீன் தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் 18-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் சிஏஏ எதிர்ப்பின் போது வெடித்த வன்முறைகளில் 53 பேர் உயிரிழந்தனர் மற்றும் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கொடூரமான கலவரத்தின் பின்னணியில் ஒரு பெரிய சதித்திட்டம் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு, உமர் காலித், ஷர்ஜீல் இமாம், ஃபாத்திமா, மீரான் ஹைதர் உட்பட UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்களது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை அக்டோபர் 31-ந் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு கூடுதல் கால அவகாசம் கோரியதால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, நவம்பர் 18 அன்று உமர் காலித் உள்ளிட்டோரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
5 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் உமர் காலித் உள்ளிட்டோர் குறித்து திரைப்பட நடிகர் பிரகாஷ் ஊடகங்களில் கட்டுரையாக எழுதினார்; பொதுக் கூட்டங்களில் உமர் காலித் விடுதலையை வலியுறுத்தி வருகிறார்; டெல்லியில் உமர் காலித் குடும்பத்தினரை சந்தித்தும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆறுதல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
