தமிழ் திரையுலகில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் வில்லன்கள் யார் என்றால் அதில் கபாலி என அழைக்கப்பட்ட நடிகர் பொன்னம்பலத்திற்கு நிச்சயம் இடம் உண்டு. தனது மிரட்டலான தோற்றத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் ரஜினி, கமல்ஹாசன், அஜித், விஜய் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் வில்லனாக நடித்துள்ளார்.
முத்து, நாட்டாமை, ஜென்டில்மேன், சிம்மராசி, துள்ளாத மனமும் துள்ளும், அமர்க்களம், சேது, கில்லி உள்ளிட்ட படங்கள் இன்றும் அவரது வில்லத்தனமான நடிப்பிற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக சிறுநீரக செயலிழப்பு பிரச்சனை காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருவதால் படங்களில் நடிக்காமல் ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் உடல் பிரச்சனைக்கு இடையே போராடி வரும் வாழ்க்கை குறித்து கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அவர் மனம் திறந்து பேசியது பலரையும் கண்கலங்க செய்துள்ளது.

கக்கூஸ் கூட கழுவலாம். ஆனால்…
அதில், “எல்லாம் இயற்கை கர்மா என்று சொல்லுவாங்க. நடக்கிறது நடக்கும். பொறந்த உடனே எதையுமே எதிர்பார்க்கல. வளர்ந்த விதம் வேற. படிச்ச விதம் வேற. வேலை செஞ்ச விதம் வேற. அதுக்கு அப்புறம் மாற்றங்களாகி வந்தது.
சந்தோஷமாக இருந்த காலங்களில் சந்தோஷமாகத் தான் இருந்தேன். அமிதாப்பச்சன்கூட என்னை மாதிரி அனுபவிச்சிருக்க மாட்டார். காரணம் என்னன்னா அவரு ஒரு கூடு மாதிரி. நான் வந்து ஃப்ரீ பேர்டு. அந்த வகையில் பார்த்தால் 3 தலைமுறைக்கு என்னென்ன அனுபவிப்பாங்களோ அதை நான் இப்பவே அனுபவிச்சிட்டேன்.
எனக்குக் கடமைகள் இருக்கு. நான் இப்படி ஆவேன்னு எனக்கே தெரியாது. வந்த பிறகு மக்கள் சப்போர்ட், எனக்குத் தொழில் சுத்தம். எங்க அப்பா என்கிட்ட சொன்னது என்னன்னா ’பொய் சொல்லாதே. திருடாதே. நீ எங்கே வேணாலும் போகலாம். கக்கூஸ் கூட கழுவலாம். ஆனால் கெட்ட சகவாசம் வச்சிக்காதே’ என்றார்.
அடுத்த ஸ்டெப் எனக்குக் கேட்டதெல்லாம் கிடைச்சது. சினிமாவுல நல்ல மரியாதை. நல்ல சாப்பாடு. நல்ல ஆரோக்கியமான உடம்பு. நல்ல உறக்கம். பேரும் புகழும். இந்த ஐந்தும் கிடைச்சாலே மிகப்பெரிய விஷயம். அதுவும் குறுகிய காலத்துல கிடைச்சது. எனக்கு ரெண்டு பேரு இருக்கு. பொன்னம்பலம். கபாலி. நான் இறந்தால் கூட என் பேரை சொல்ற அளவுல இருக்கு” என்றார்.

எதுவுமே அளவோடு இருந்தா நல்லது!
மேலும், “இந்த உலகத்திலயே மிகக் கொடுமையான தண்டனை. எதிராளிக்குக் கூட வரக்கூடாதுன்னா அது டயக்னோசிஸ் பண்றதுதான். ஒரு நாள் விட்டு ஒரு நாள் 2 இன்ஜக்ஷன். பிளட் எல்லாம் எடுத்துடுவாங்க. 750 வாட்டி நானே ஊசி குத்திருக்கேன். அதுவும் ஒரே இடத்துல. கிட்டத்தட்ட 4 வருஷமா பண்ணிக்கிட்டு இருக்கேன்.
உப்பு, கீரை வடை, தக்காளி, உருளைக்கிழங்குன்னு சாப்பிடக்கூடாதுன்னு சொல்லுவாங்க. நல்லா சாப்பிட்டுப் பழகுனவன் கிட்னி ஃபெயிலியர் ஆச்சுனா, அதுக்கு செத்துப்போயிடலாம்.
இப்போ கிட்னி நல்லா ஆகிடுச்சு. எல்லாம் சாப்பிடலாம். அந்த ஸ்டேஜ்லதான் இருக்கேன். ஆனா ஒரு அளவு தான் சாப்பிடணும்.
சாவு வரும் முன் ஆஸ்பிட்டலுக்குப் போகக்கூடாது. சூசைடு பண்ணிக்கலாம். ஆண்டவன் ரெண்டும் படைச்சிருக்கான். நல்லது. கெட்டது. எதுவுமே அளவோடு இருந்தா நல்லது.
நான் டிரிங்ஸ் நிறைய அடிப்பேன். யோகா பண்றதால போதை ஏறாது. நான் தண்ணி அடிச்சிட்டு வந்தேன்னு எங்கேயுமே தெரியாது“ என்றார்.