தூய்மைப் பணியாளர் பத்மாவின் பாதம் தொட்டு வணங்கிய நடிகர் பார்த்திபன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை தியாகராய நகரில் கடந்த 11ஆம் தேதி வழக்கம்போல் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பத்மா, குப்பையில் கிடந்த ஒரு கைப்பையை பார்த்துளளார். அதில் சுமார் 45 சவரன் நகைகள் இருந்ததைக் கண்டார். இன்றைய மதிப்பில் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த நகைகளை அவர் காவல்துறையிடம் ஒப்படைத்தார். கடுமையான வறுமை நிலையில் இருந்தபோதிலும், பத்மா தான் குப்பையில் கண்ட நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்ததற்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான நகைகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து நகைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், பத்மாவின் நேர்மையைப் பாராட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். சென்னை மத்திய கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம், பத்மாவின் புகைப்படத்துடன் கூடிய ‘மை ஸ்டாம்ப்’ அஞ்சல் தலையை வெளியிட்டு கவுரவித்தது. கடந்த சில தினங்களுக்கு முன், நடிகர் ரஜினிகாந்த் தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்ததோடு, அவருக்கு தங்கச் சங்கிலியையும் பரிசளித்தார்.
இந்நிலையில், நடிகர் பார்த்திபன் கலந்து கொண்ட எத்திராஜ் கல்லூரி நிகழ்ச்சிக்கு தூய்மைப் பணியாளர் பத்மா அழைக்கப்பட்டிருந்தார். அப்போது நடிகர் பார்த்திபன், பத்மாவைப் பாராட்டியதோடு, அவரது கால்களுக்கு காலணியை வழங்கினார். மேலும் பத்மாவின் பாதம் தொட்டு வணங்கினார். பின்னர் அவருக்கு புடவை ஒன்றைப் பொன்னாடையாக அணிவித்து, கிரீடம் சூட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் பதிவில், “தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும்.
வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, ‘உலக அழகி’ என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்…
சிலர் மட்டுமே சீருடையை பெருமையாகப் பார்க்கிறார்கள். பலர் அதை ஏதோ பொழப்புக்கான அகவுரவமாகவும் பார்த்து வேலை முடிந்ததும் வேகமாக கழட்டி எறியும் நினைப்பில் இருக்க பத்மா அந்த நினைப்பையும் துவைத்துத் தூய்மைப் படுத்துவதாக நான் உணர்ந்தேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
