”எங்கள் குடும்பத்தில் யாருமே இதை மறக்கமாட்டோம்” – நடிகர் கிங்காங் உருக்கம்!

Published On:

| By christopher

actor kingkong thanked mkstalin

தனது மகள் திருமணத்தில் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கிங்காங் உருக்கமுடன் நன்றி தெரிவித்துள்ளார். actor kingkong thanked mkstalin

தமிழ்சினிமாவில் 1988-ல் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான ’ஊரை தெரிஞ்சுகிட்டேன்’ படத்தில் அறிமுகமாகி, ரஜினிகாந்தின் ‘அதிசயப் பிறவி’ படத்தில் தனது நடனம் மூலம் அடையாளம் பெற்றவர் நடிகர் கிங்காங்.

அதன்பின்னர் தனது இயல்பான நடிப்பு, நடனம், நகைச்சுவை என கவர்ந்த அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவருக்கு கலா என்ற மனைவியும், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் தனது மகன் கீர்த்தனா காதலை ஏற்று திருமணத்திற்கான ஏற்பாடுகளை தொடங்கினார். அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கும்,

நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷால் தொடங்கி கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் வரை என அனைத்து பிரபலங்களுக்கும் நேரில் சென்று திருமண அழைப்பிதழை வழங்கினார்.

தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள அறுபடை முருகன் கோயிலில் நேற்று (ஜூலை10) காலை கீர்த்தனா – நவீன் ஜோடியின் திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் மாலையில் சென்னை அசோக் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு விழா நடைபெற்றது.

இந்த் விழாவிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களுக்கு பூங்கொத்து மற்றும் பரிசு வழங்கி வாழ்த்தினார். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் என பலரும் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

திரைத் துறை சார்பில் நடிகர்கள் விஷால், நாசர், சார்லி, ரோபோ சங்கர், ஐசரி கணேஷ் போன்றவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் தனது மகள் திருமணத்தில் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கிங்காங் உருக்கமுடன் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அவர் பேசுகையில், “திருமண அழைப்பிதழ் கொடுக்கும்போது, ‘நான் வரப்பார்க்கிறேன்’ என்று மட்டுமே தெரிவித்தார். ஆனால் நான் நினைத்தே பார்க்கவில்லை. நேற்று நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திடீர்னு முதல்வர் வர்றார் என சொன்னவுடன் கையும் ஓடல. காலும் ஓடல.

திருவாரூர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு 5 மணிக்கு கிளம்பி திருச்சி வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். அதன்ப்பின்னர் நேராக எனது மகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியது ரொம்ப சந்தோசமாக இருந்தது. இதை பற்றி பேசல எனக்கு வார்த்தையே இல்லை. என்னுடைய உயரத்தைப் பார்க்காமல் தன்னுடைய பிசியான நேரத்திலும் வந்த முதல்வருக்கு என் குடும்பத்தில் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் குடும்பத்தில் யாருமே இதை மறக்கமாட்டோம்” என கிங்காங் பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share