களத்தூர் கண்ணம்மா படத்திற்காக 1960ஆம் ஆண்டு சிறந்த குழந்தை நட்சத்திற்கான தேசிய விருதை தனது 5 வயதில் வென்றார் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில் தனது 65 வருட சாதனையை முறியடித்த 4 வயது குழந்தைக்கு அவர் மனம் நெகிழ்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு சுதாகர் ரெட்டி இயக்கத்தில் உருவான ‘நாள் 2’ மராத்தி படத்தில் 2 வயதேயான த்ரிஷா தோசர் நடித்திருந்தார். இவருக்கு தற்போது அந்த ஆண்டிற்கான குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது. கடந்த 23ம் தேதி நடந்த 71வது தேசிய விருது விழாவில் த்ரிஷா தோசர், ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து தேசிய விருதை பெற்றார்.
விருது வழங்கும் விழாவில் த்ரிஷா தோசர் என்று அழைத்தவுடன் அழகான சேலை அணிந்து மேடையில் நடந்து வந்த சிறுமி விருதை பெற்றார். த்ரிஷா தோசருக்கு விருது வழங்கிய போது விழா அரங்கமே கரகோஷத்தால் அதிர்ந்தது.
இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் தனது எக்ஸ் பதிவில் த்ரீஷா தோசருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,”டியர் மிஸ். த்ரீஷா தோசர், உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்! நான் ஆறு வயதில் முதல் விருது பெற்றிருந்தேன், ஆனால் நீங்கள் என் சாதனையை முறியடித்துவிட்டீர்கள்! நீங்கள் அதைவிட இளம் வயதிலேயே பெற்றுள்ளீர்கள். நீங்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும், மேலும் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.