“இட்லி கடை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் எனக்கு செஃப் ஆக ஆசைப்பட்டடேன் என தெரிவித்த தனுஷ், வடசென்னை 2 அடுத்த ஆண்டு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நேற்று (சென்னை – 20) நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் தனுஷ், சத்யராஜ், பார்த்திபன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடகர் ஸ்வேதா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இரண்டு முறை இட்லி கடை திரைப்படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்த தனுஷ் ரசிகர்கள் முண்டியடித்து செல்ல முயன்றதால் குழந்தைகளுடன் வந்த பெண்கள் நெரிசலில் சிக்கினர். மேலும் 4 பெண்கள் மயங்கி விழுந்தனர். இதனால் அப்பகுதியில் லேசான பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மேடையில் தனுஷ் பேசத் துவங்கிய போது திடிரென தனுஷ் ரசிகர் ஒருவர் பாதுகாப்புகளை மீறி மேடை மீது ஏறி தனுஷ் உடன் புகைப்படம் எடுக்க முயன்றார். அப்போது பாதுகாவலர்கள் இளைஞரை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். ஆனால் தனுஷ் அந்த இளைஞரை மேலே அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனால் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் தனுஷ் பேசுகையில், எனக்கு சமைக்க ஆசை, அதே துறையில் படித்து செஃப் ஆக ஆசைப்பட்டேன். அதனால் தானோ என்னவோ எனக்கு அப்படியே தான் படமும் அமைகிறது. நம் எண்ணம் போல வாழ்க்கை. இளைஞர்கள் என்ன சாதிக்க விரும்புகிறோம் என நம்ப வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். கருத்து கூறுகிறேன் என நினைக்க வேண்டாம். என் ரசிகர்கள் யாரும் யார் வம்புக்கும் போக மாட்டாங்க. இதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி உள்ளது. இது ஒரு சாதாரண படம். அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். காலை 8 மணிக்கே வரும் விமர்சனத்தை நம்பாதீங்க, 12 மணிக்கு தான் தெரியும். சினிமாவிற்கு இது மிகவும் தேவை. அனைவரின் படமும் ஓட வேண்டும். சரியான விமர்சனம் பார்த்து நீங்கள் முடிவு செய்யுங்கள் என்றார். மேலும் வடசென்னை – 2 அடுத்த ஆண்டு வர உள்ளது என புதிய அப்டேட் ஒன்றையும் தனது ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் தனுஷ்