தமிழ் சினிமாவில் காலம் கடந்தாலும் சில படங்களின் கதாப்பாத்திரங்கள் மக்களால் எப்போதும் நினைவு கூறப்படும். அப்படிப்பட்ட கதாப்பாத்திரங்களில் ’அறை எண் 305ல் கடவுள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஜாவா சுந்தரேசன் கதாப்பாத்திரம். அதில் மிக இயல்பாக நடித்த நகைச்சுவை நடிகர் சாம்ஸ்.
திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு நடிகரும் எழுத்தாளருமான கிரேஸி மோகனுடன் 11 ஆண்டுகள் மேடை நாடகங்களில் நடித்தார். அதன்பின்னர் 1998 ஆம் ஆண்டு வெளியான காதல் மன்னன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.
அதன்பின்னர் நடிகர்கள் சூர்யா, விஜய், விஷால், சிவகார்த்திகேயன், கமல், ரஜினி, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்த படங்கள் ஹிட்டாகியுள்ளன.
இந்த நிலையில் தனது பெயரை ஜாவா சுந்தரேசன் என திடீரென மாற்றியுள்ளார் நடிகர் சாம்ஸ்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “என் உண்மையான பெயர் சுவாமிநாதன். திரைத்துறையில் “சாம்ஸ்” என மாற்றிக் கொண்டு நடித்து வந்தேன். ‘அறை எண் 305ல் கடவுள்’ படத்தில் நான் நடித்த ‘ஜாவா சுந்தரேசன்’ கதாபாத்திரம் ரசிகர்களிடையே பிரபலமானது. ரசிகர்கள் என்னை “ஜாவா சுந்தரேசன்” என்று அழைப்பதும், சுற்று வட்டாரத்தில் அசுர வளர்ச்சி அடைந்தவர்களை “ஜாவா சுந்தரேசன்” என்று அழைத்து மீம்ஸ் உருவாக்கி ரசித்தும் வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு, இன்று முதல் என் பெயரை அதிகாரபூர்வமாக “ஜாவா சுந்தரேசன்” என மாற்றிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.