கோல்ட்ரிஃப் மருத்தை தயாரித்த சன்பார்மா உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் பின்னர் அந்த கம்பெனியை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
‘கோல்ட்ரிஃப்’ (Coldrif) இருமல் மருந்து சாப்பிட்டு மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீசன் பார்மாவில் இந்த மருந்து தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த சிரப்பில் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட அதிகமாக டைதிலீன் கிளைகோல் (DEG) இருப்பதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டு அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்று (அக்டோபர் 9) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், ‘ ஏற்கனவே கோல்ட்ரிஃப் என்ற மருந்தில் நச்சுத்தன்மை அதிகமாக கலப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 1ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் சம்பவம் நடந்த உடனே அவர்கள் தமிழ்நாட்டுக்கு தகவல் சொன்னார்கள்.
தமிழ்நாடு அரசு உடனடியாக ஆய்வு செய்து இதில் நச்சுத்தன்மை இருப்பது கண்டுபிடித்து மத்திய பிரதேசத்துக்கும் ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும், ஒடிசா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கும் தகவல் சொன்னோம்.
ஆனால், மத்திய பிரதேசமும் ஒன்றிய அரசும் இந்த மருந்தில் தவறு இல்லை என்று சொன்னார்கள். ஆனால், நாம்தான் இந்த மருந்தில் நச்சுத்தன்மை எந்த அளவுக்கு கலப்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திவிட்டு, கடந்த அக்டோபர் 3ஆம் தேதியிலிருந்து அந்தத் தயாரிப்பை நிறுத்த உத்தரவிட்டோம். அதோடு நிறுவனத்தை மூடுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 7ஆம் தேதி அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை நோட்டீஸ் கொடுத்தோம். அந்த நோட்டீசை வாங்குவதற்கு ஆள் இல்லை என்பதால் அதை அவர் வீட்டில் ஒட்டி விட்டு வந்தார்கள்
இந்நிலையில், இன்று அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது மட்டுமல்ல வட்டாட்சியர் அவரை அழைத்துக்கொண்டு சென்று அந்த ஆலையில் விசாரணை நடத்துவார். விசாரணை நடத்தி, ஆலையில் அந்த பொருளில் நச்சுத்தன்மை கலப்புக்கு காரணம் கேட்பார்கள். அந்த பதிலுக்கு பிறகு அந்த கம்பெனியை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்போது நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதற்கு இன்னும் 2 அல்லது 3 நாட்களில் முடிவெடுக்கப்படும்.
அதுபோன்று 2 மூத்த மருந்துப்பொருள் தர ஆய்வாளர்களிடம் கடந்த 2 ஆண்டுகளாக ஏன் தொடர்ந்து சென்று இந்த மருந்து பொருட்களை ஆய்வு செய்யவில்லை என்று விளக்கம் கேட்டோம். அதன் பிறகு, சரியாக கண்காணிக்காத அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இந்த மருந்தை சாப்பிட்டு 20 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக வழக்கறிஞர் விஷால் திவாரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த மனுவை 24 மணி நேரத்திற்குள் விசாரிக்க தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இன்று ஒப்புதல் தெரிவித்துள்ளார்.