செங்கல்பட்டு மாவட்ட அச்சரப்பாக்கம் கிராம அலுவலரின் உதவியாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சரபாக்கம் கிராம அதிகாரியாக (விஏஓ) முத்துமாரி பணியாற்றி வருகிறார். இந்த கிராம அலுவலரின் உதவியாளராக இருந்தவர் கீதா. இவர் அச்சரபாக்கம் அலுவலகத்திலேயே கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி விஷம் குடித்துவிட்டார். இதனால் மயங்கி விழுந்த அவரை மீட்டு அங்கிருந்த மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலில் கீதா அச்சரபாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி உயிரிழந்தார். VAO Female Assistant commits suicide
ஆனால் கீதாவின் உடலை வாங்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மறுத்து வருகின்றனர். அவர்களிடம் தாசில்தார், ஆர்டிஓ, சப் கலெக்டர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர், ஆனால் சங்க நிர்வாகிகளோ கீதாவின் இறப்புக்கு விஏஓ முத்துமாரி, வருவாய் ஆய்வாளர்(ஆர்ஐ) நாகராஜ், ஆர்டிஓ (வருவாய் வளர்ச்சி அலுவலர்) ரம்யா ஆகியோர் தான் காரணம். இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்றைய தினம் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால், இன்றும் பேச்சுவார்த்தை தொடரவுள்ளது. VAO Female Assistant commits suicide
இதைப்பற்றி விஏஓ சங்கத்தின் மாநில தலைவர் தில்லை கோவிந்தன் கூறுகையில், “கடந்த மார்ச் 18ஆம் தேதி 15 கிராம அலுவலர்களின் உதவியாளர்களை தாசில்தார் கணேசன் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்த பணியிட மாற்றத்தை ரத்து செய்யக்கோரி மாற்றம் செய்யப்பட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் அரசு ஊழியர்கள் நடத்தினர்.
அங்கு வந்த தாசில்தார் கணேசன், ஆர்டர் போட்டிருந்தாலும் விருப்பமுள்ளவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று பணியாற்றட்டும், விருப்பம் இல்லாதவர்கள் தற்போது எங்கு பணி செய்கிறார்களோ அங்கேயே பணி செய்யட்டும் என்று வாய்மொழியாக கூறியிருக்கிறார்.
இந்தசூழலில் தான், கிராம அலுவலரின் உதவியாளரான கீதா தனது மகள்-மருமகன் வீட்டுக்கு செல்ல வேண்டும். அதனால் 11ஆம் தேதி விடுமுறை வேண்டும் என்று ஏப்ரல் 10ஆம் தேதியே அதற்கான தகவலை வாட்ஸ் அப் மூலம் ஆர்.ஐக்கு தெரிவித்துவிட்டார்.
இதைதொடர்ந்து 12,13,14 (சனி, ஞாயிறு, தமிழ் புத்தாண்டு) என அரசு விடுமுறைக்கு பின் 15ஆம் தேதி அலுவலகத்துக்கு வந்தார் கீதா. அப்போது விஏஓ முத்துமாரி, உங்களை ஆர்ஐ வரச் சொன்னார். போய் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால் கீதா ஆர்ஐ-யை சென்று பார்த்தபோது, நீங்கள் ஆர்.டி.ஓ ரம்யாவை போய் பார்த்துவிட்டு வாங்க என்று சொல்லியிருக்கிறார்.

இதனால் அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு சென்றார் கீதா. ஆனால் மாலை 4 மணிக்குதான் ஆர்.டி.ஓ-வை பார்க்க முடிந்தது. அப்போதுதான் ஆர்.டி.ஓ ரம்யா, உன்னை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்க வேண்டுமா… நீ அவ்வளவு பெரிய ஆளா… பணியிட மாற்றம் செய்தால் போக வேண்டியதுதானே என்று சங்கடப்படும் வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருக்கிறார்.
இதனால் அங்கிருந்து வந்த கீதா, மீண்டும் 17ஆம் தேதி விஏஓ ஆபிஸுக்கு சென்றார். அங்கு ஆர்.டி.ஓ நேராக வந்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார். அப்போது அதிகாரி உத்தரவை மதிப்பதில்லையா என்று கேட்டு கோபமாக பேசி, சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என்று எச்சரித்திருக்கிறார். VAO Female Assistant commits suicide
எனவே ஆர்.டி.ஓ போனதும், சில ஆடியோ பதிவுகளை போட்டுவிட்டு, மருந்து குடித்துவிட்டார்” என்றார். VAO Female Assistant commits suicide
அந்த ஆடியோக்களும் நமக்கு கிடைத்தது. VAO Female Assistant commits suicide
அதில் கீதா, “நான் மூன்று வருடமாக ரொம்ப கஷ்டத்தை அனுபவிக்கிறேன். வேலையில் எனக்கு ரொம்ப டார்ச்சராக இருக்கிறது. தப்பே செய்யாமல் அதிகாரிகள் தண்டனை கொடுக்கிறார்கள். ஆர்ஐ என்னை காசு வாங்கிக்கொண்டு வர சொல்லுவார். ஆனால் நான் லோக்கலில் இருப்பதால் என்னால் காசு வாங்கிக்கொண்டு வரமுடியாது என்று சொன்னேன்.
அதனால் என்னை டிரான்ஸ்பர் செய்துவிட்டனர். நான் சங்கத்தில் பேசி மீண்டும் அச்சரப்பாக்கத்தில் வேலை செய்தேன். யார் யாரையோ வைத்து நிறைய பெட்டிசன் போட்டார் ஆர்.ஐ. அதற்கெல்லாம் நான் தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று விளக்கம் அளித்து வந்தேன். அவர் இரண்டு வருடம் பணி செய்தார்.
இந்தநிலையில், விஏஓவாக முத்துமாரி அம்மா வந்தார். எந்த அதிகாரி வந்தாலும் எனக்கு வேலை கொடுப்பதில்லை. நானும் பொறுத்து பொறுத்து போனேன். சமீபத்தில் தான் இதுதொடர்பாக அவரிடம் கேட்டேன். ஏன்மா எனக்கு வேலை கொடுப்பதில்லை. நான்தானே அச்சரபாக்கம் வில்லேஜ் அசிஸ்டெண்ட். எனக்குதானே வேலை கொடுக்க வேண்டும். காலை 10 மணிக்கு வருகிறேன். மாலை 5 மணிக்கு நீங்கள் சென்ற பிறகுதானே போகிறேன் என்று கேட்டேன். அதற்கு அவர், எந்த விஷயமும் உன்கிட்ட சொல்ல வேண்டுமென்ற அவசியம் கிடையாது. நீ என்ன வண்டி வைத்திருக்கிறாயா? என்ன ஏற்றிக்கொண்டு போவியா? வாய் மட்டுதாம் வேறு ஒன்றும் செய்ய தெரியாது என்றார்.
நான் அலுவலகத்துக்கு வருவதற்கு முன் வேறு அசிஸ்டெண்ட் வைத்துக்கொண்டு அளக்க சென்றுவிடுவார்கள். லூசு, சனியன், என் மூஞ்சிலேயே முழிக்காத என்றெல்லாம் பேசுவார்கள்.
இதுதொடர்பாக ஆர்.ஐ-யிடம் சொன்னேன். ஆனால் ஆர்.ஐயும் கேட்கவில்லை. காசு சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஆர்-ஐ-யும், விஏஓவும் சேர்ந்து என்னை டிரான்ஸ்பர் செய்துவிட்டார்கள்” என்றெல்லாம் அந்த ஆடியோக்களில் பேசியிருக்கிறார்.
இதுசம்பந்தமாக ஆர்.டி.ஓ ரம்யாவிடம் பேச நாம் தொடர்பு கொண்ட போது, அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை.
அவருடைய அலுவலகத்தில் நாம் விசாரித்த போது, “ஆர்.டி.ஓ ரம்யா நேர்மையானவர்கள். வேலை செய்யவில்லை என்றால் விரட்டுவார். மற்றபடி எங்களுக்கு எதுவும் தெரியாது” என்றனர்.
