சென்னை விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் நடந்த விபத்தில், கல்லூரி மாணவி படுகாயமடைந்த விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நீலாங்கரையை அடுத்துள்ள ஈஞ்சம்பாக்கத்தில் தனியாருக்குச் சொந்தமான விஜிபி தீம் பார்க் அமைந்துள்ளது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் ஈர்க்கும் வகையில் பல்வேறு ரெய்டுகள் உள்ளன.
இந்தநிலையில் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜப்ரீன் பாத்திமா இந்த பூங்காவுக்கு கடந்த 6ஆம் தேதி விளையாடச் சென்றுள்ளார். பூங்காவில் உள்ள ராக் அண்ட் ரோல் ராட்டினத்தில் அமர்ந்து விளையாடியபோது கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதுகு தண்டுவடத்தில் அடிபட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து உரிய சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளார் ஜப்ரீன் பாத்திமா.
இந்த விபத்து தொடர்பாக ஜப்ரீன் பாத்திமா பெற்றோர் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீடார் விசாரணை நடத்தினர்.
இதில், மாணவி அமர்ந்த பின் முறையான சீட் பெல்ட்டை அணிவதற்குள் பூங்கா ஊழியர்கள் அஜாக்கிரதையாக ராட்டினத்தை இயக்கியதாகவும், அதனால் தான் மாணவி கீழே விழுந்துவிட்டார் என்றும் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் பூங்கா ஊழியர்களான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சில்வெஸ்டர் பூர்டி (20), அருணோதய் கவுலா(22) ஆகிய இரண்டு பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
விஜிபியில் இதுபோன்று விபத்து நடப்பது முதல்முறையல்ல.
ஏற்கனவே, கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம், இதே பூங்காவில் ‘டாப் கன்’ ராட்டினம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவானில் நின்று, 36 பேர் சுமார் 3 மணி நேரம் அந்தரத்தில் தவித்ததும், பின்னர் அவர்கள் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
