இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சனுக்கு இணையாக ஒலிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று அபிமன்யு ஈஸ்வரன்.
தமிழகத்தைச் சேர்ந்த ரங்கநாத பரமேஸ்வரன் என்பவருக்கும், பஞ்சாபை சேர்ந்த தாயாருக்கும் பிறந்தவர் அபிமன்யு ஈஸ்வரன். தனது சிறு வயது முதலே பெங்கால் அணிக்காக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
தற்போது 29 வயதான அபிமன்யு ஈஸ்வரன் ஒரு திறமையான வலது கை தொடக்க ஆட்டக்காரர். கடந்த 2013-ம் ஆண்டு முதல் முதல்தரப் போட்டிகளில் விளையாடி வரும் இவர், இதுவரை 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று 48-க்கும் மேல் சராசரியுடன், 27 சதங்கள் உட்பட 7,800-க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார். குறிப்பாக, 2024-25 துலீப் டிராபி மற்றும் இரானி கோப்பை தொடர்களில் சதங்கள் அடித்து தனது அபாரமான ஃபார்மை வெளிப்படுத்தினார். இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டனாகவும் இவர் செயல்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரன் இடம்பிடித்திருந்தார். அந்தத் தொடருக்கு முன்பாக நடந்த இந்தியா ‘ஏ’ போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால், நிச்சயம் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்கப்படாதது அவருக்கு மட்டுமின்றி கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களிடமும் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இந்த நிலையில் அவரது தந்தை ரங்கநாதன் பரமேஸ்வரன் அளித்த பேட்டியில், ”அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் அபிமன்யு நிச்சயம் அறிமுகம் ஆவார்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்காததால் அபிமன்யு மிகவும் வருத்தமடைந்தார். ’அப்பா, எனக்கு இன்னும் இடம் கிடைக்கவில்லை’ என்று என்னிடம் போனில் வருத்தப்பட்டார். அதே வேளையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் என் மகனிடம், ‘நீ சரியான பாதையில்தான் பயணிக்கிறாய். உனக்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். அதுவும் நீண்டகால வாய்ப்பாக இருக்கும். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சோபிக்கவில்லை என்பதற்காக உன்னை அணியை விட்டு நீக்க மாட்டேன்’ என்று உறுதியளித்துள்ளார்,” என்றார்.
கம்பீரின் இந்த வார்த்தைகள், அபிமன்யுவிற்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. தற்போது துலீப் டிராபி தொடருக்காக அவர் தயாராகி வருகிறார்” என ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.