கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பது பழமொழி. ஆனால் சினிமா எனும் தெய்வம் கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்து விட்டால் கூரையைப் பிய்த்துக் கொண்டு மட்டுமல்ல. நாலாபக்கமும் சுவர்களை இடித்துக் கொண்டும் , பூமியில் இருந்து ஆர்ட்டீசியன் ஊற்று போல பீய்ச்சி அடித்தும் கொட்டும். பெறுபவருக்கு ஒன்றும் ஆகாது. வீடு போனாலும் அரண்மனைகள் வாங்கி விடலாம்.
அப்படி பலன் பெறும் ஒருவரின் கதை இது .
பொதுவாக சினிமாவுக்கு கதையை விட திரைக்கதை முக்கியம் என்பார்கள். ஆனால் சில சமயம் அட்டகாசமான கதை அமைந்து விட்டால், திரைக்கதை அப்படி இப்படி இருந்தால் கூட அந்தக் கதையின் ஊடாக வரும் சில காட்சிகளே படத்தைத் தூக்கி நிறுத்தி விடும்.
அப்படி ஒரு படம்தான் டூரிஸ்ட் ஃ பேமிலி
‘இலங்கையில் நமது இனம் அழிக்கப்பட்ட போது ஏமாற்று அரசியல்வாதிகளை நம்பி கிரிக்கெட் பார்த்துக் குடித்துக் கூத்தடித்து வேடிக்கை பார்த்து விட்டு விட்டோமே…’ என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த தமிழக மக்கள், டூரிஸ்ட் ஃ பேமிலி படத்தின் இறுதியில் ஈழத் தமிழரை தமிழ மக்கள் ஆதரிப்பது போன்ற கிளைமாக்சில் நெகிழ்ந்து போய் , படத்தைக் கொண்டாடி விட்டார்கள்.
படத்தை எழுதி இயக்கி இருந்த அபிஷன் ஜீவித் அந்தப் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்து இருந்தார் . அந்த கேரக்டரும் அவரது நடிப்புக்கும் கூட செயற்கையாக இருந்ததாக அப்போது விமர்சிக்கப்பட்டது .
ஆனாலும் டூரிஸ்ட் ஃ பேமிலி படத்தின் ஆகா ஓகோ வெற்றி அபிஷன் ஜீவித்தை கதாநாயகனாகவே ஆக்கி விட்டது.
ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் டூரிஸ்ட் ஃ பேமிலி படத் தயாரிப்பளர்கள் பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் இணைந்து தயாரிக்கும் , வித் லவ் ( With Love ) என்ற படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி’ யை இயக்கிய அபிஷன் ஜீவித் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அனஸ்வரா ராஜன் கதாநாயகி.
டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய மதன் இயக்கி உள்ளார்
படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை , ரஜினிகாந்த் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.(மகள் தயாரிக்கும் படத்துக்கு இது கூட செய்யலைன்னா எப்படி?)
முழுக்க முழுக்க நவீன இளைஞர்களை கவரும், காதல் கதையாக உருவாகி வரும் படமாம் இது.
அதான் சினிமா. அதனால்தான் அது சினிமா !
— ராஜ திருமகன்
