விமர்சனம்: ஆரோமலே!

Published On:

| By Minnambalam Desk

பயப்படாமலே பார்க்கலாமா?

படத்தின் பெயருக்கு அர்த்தம் தெரியாதவர்களுக்கு மட்டும் ஒரு விளக்கம் .

ADVERTISEMENT

சிம்பு த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வந்த ஒரு பாடலின் முதல் வார்த்தைதான் ஆரோமலே . இந்த மலையாள வார்த்தைக்கு, ‘என் அன்புக்குரிய….’ என்று பொருள் .

பள்ளிக் காலத்தில் ஒரு காதல் தோல்வியும் , கல்லூரிக் காலத்தில் ஒரு காதல் தோல்வியும் சந்தித்த பின்னும் காதலிக்காமல் கல்யாணம் செய்து கொள்வது அநியாயம் என்று எண்ணும் ஒரு பையன்( கிஷன் தாஸ்).

ADVERTISEMENT

அப்பா (பாண்டியன்) மேல் எப்போதும் கோபப்படும் அவனுக்கு அம்மா (துளசி) என்றால் பயம் மரியாதை

அப்பா மேல் அவன் ரொம்பக் கோபப்பட, அவனைக் கண்டிக்கும் அம்மா , ‘ நீ அப்பா சொல்ற வேலைக்குப் போ’ என்று சொல்ல,

ADVERTISEMENT

அம்மா சொன்னதற்காக வேலைக்குப் போனால் .. அது ஒரு மேட்ரிமோனியல் நிறுவனம் !

ஆனால் அங்கே அனுபவம் மிக்க சீனியர் அதிகாரியாக இருக்கும் இளம்பெண் மீது (சிவாத்மிகா) அவனுக்கு ஈர்ப்பு வருகிறது . ஆனால் அவள் அவனை துச்சமாக எண்ணுகிறாள் .

அங்கே மனங்களின் இணைப்பைப் பற்றிக் கவலைப்படாமல்…. வேலை, தோற்றம் , வசதி இவைகளை வைத்தே கல்யாண ஜோடி முடிவு செய்வதோடு, ஏகப்பட்ட தகிடு தத்தங்கள் செய்து தங்களிடம் வரும் ஒவ்வொருவரின் தலையிலும் யாரையாவது எப்படியாவது கட்டி விடும் தீவிரமும் கண்டு கொந்தளிக்கிறான் அவன். வரன்களை அவர்கள் மனிதர்களாகப் பார்க்காமல் சீக்கிரம் கிளியர் செய்யும் ஃபைல்களாகப் பார்க்கிறார்கள்.

ஒரு பணக்காரர் தன் மகளின் காதலுக்கு எதிராக , ஒரே வாரத்தில் தகுதியான மாப்பிள்ளை பார்க்கும் வாய்ப்பை இந்த மேட்ரிமோனியலுக்குக் கொடுக்க, பெண்ணின் காதல் பற்றித் தெரிந்தும் அவள் அதை ஒரு கஸ்டமர் சர்வீஸ் ஆக மட்டும் பார்க்க,

மாறாக அவன் அந்தப் பெண்ணை காதலனுடன் சேர்த்து வைக்க முயல,

சீனியர் என்ற அதிகாரத்தில் அவள் அவனைத் திட்ட, அவனும் பொங்கி எழுகிறான் .

குழந்தைக்குத் தந்தையாகும் வாய்ப்பில்லாத ஐம்பத்தைந்து வயது நபர் ( விடிவி கணேஷ்) அங்கே மணமகள் தேடி ரொம்ப காலமாக வந்து கொண்டிருக்க,அவருக்கு ஏற்ற மணமகள் பார்க்கும் விசயத்தில் அவளது சீனியாரிட்டியும் திறமையும் எடுபடவில்லை .

அதைக் கையில் எடுக்கும் அவன் , “முடிஞ்சா உன் திறமையை எல்லாம் காட்டி இவருக்கு ஒரு மேட்ச் பண்ணிக் கொடு . தொழில் திறமை இல்லாம மனிதாபிமானத்தோடு எந்தப் பொய்யும் சொல்லாம நானும் அவருக்கு ஏற்ற மணமகளைத் தேடுகிறேன் என்று சவால் விட .

ஜெயித்தது யார் ? காதலையே வெறுக்கும் அவள் காதலித்தாளா? காதல் கல்யாணம்தான் லட்சியம் என்று வாழும் அவனுக்குக் காதல் கனிந்ததா? யாருக்கு யாரோடு ?என்பதே,

மினி ஸ்டுடியோஸ் சார்பில் வினோத்குமார் தயாரிக்க, கிஷன்தாஸ், டாக்டர் ராஜசேகர்- ஜீவிதா நட்சத்திர ஜோடியின் மகளான ஷிவாத்மிகா, வி டி வி கணேஷ் ஆகியோர் நடிப்பில் சாரங் தியாகு, கிஷன் தாஸ், பிபின் தாஸ், கௌஷிக் சம்பத், ஆஷா மீரா ஐயப்பன் ஆகியோரின் திரைக்கதையில், சாரங் தியாகு இயக்கி இருக்கும் இந்த ஆரோமலே .

முதல் காதல் நகைச்சுவையில் முடிய , அடுத்த காதல் கிரிக்கெட் மூலமாக ‘டக் அவுட்’ ஆக, , காட்சிகளே காமெடியாக இருப்பது பாராட்டுக்குரியது

கதை சீரியஸ் ஆகும்போது நாயகனின் நண்பனாக வருபவர் அடிக்கும் காமெடி கை கொடுக்கிறது

காதலித்துதான் கல்யாணம் பண்ண வேண்டும் என்று என்னும் நபருக்கு மேட்ரிமோனியல் வேலை என்பதும் நல்ல திருப்பம்தான் .

அங்கேயும் அவன் காதல் முகம் காட்ட , அவ்வளவு இறுக்கமான கடுமையான கதாநாயகியும் அதற்கான காரணமும் அவர்களுக்கு பின்னர் நிகழும் சம்பவங்களும் அடிப்படையில் வித்தியாசமானவை

55 வயது ஆகி கல்யாணத்துக்கு ஏங்கும் நிலையிலும் ”உன் அம்மாவை வெளியே எங்காவது தங்க வைக்கலாம்” என்று சொல்லும் பெண்ணைப் புறக்கணிக்கும் மகன் கேரக்டர், சென்ற தலைமுறைகள் பெற்றோர் மேல் பாசமாக இருந்ததை சொல்வதோடு இன்றைய தலைமுறைக்கு சொல்லும் படிப்பினையாகவும் இருக்கிறது.

நாயகனிடம் அவனது அம்மா சொல்லும் அவளது கதை சிறப்பு

காதல் என்பது நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும்.அவர்களின் முந்தைய ரகசியங்களை நோண்டாதே .அது உன் மேல் வெறுப்பாக ஆகும். சொல்ல வேண்டும் என்றால் சமயம் வரும்போது அவர்களே சொல்வார்கள். இல்லாவிட்டால் உனக்கும் அது தேவை இல்லை என்ற படத்தின் அடிப்படை நோக்கம் மேன்மையானது

திரைக்கதையில் பலர் பங்காற்றியதன் விளைவு, எழுத்து சிறப்பாக வந்திருகிறது . மேட்ரிமோனியல் அலுவலகம் சம்மந்தப்பட்ட காட்சிகள் அபாரம்

இயக்குனர் சாரங் தியாகுவின் படமாக்கல், கவுதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு இரண்டும் மிகச் சிறப்பு .

போகப் போக இந்தப் படம் முப்பது வருடத்துக்கு முந்தைய காதல் படங்களைப் போலவே தேவை இல்லாமல் நீள்கிறது.

சின்ன விஷயத்தில் காதலர் சண்டை வருவதையும் பின்னர் அவர்கள் பிரிந்து விடுவார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இருந்து ஒரு மாற்றம் அப்பால் ஒரு ஏற்றம் என்பதை எல்லாம் அன்பே வா காலம் முதலே பார்த்தாச்சே.

படம் முழுக்க இருக்கும் ஒரு வித பணக்காரத்தனம் இந்த படத்தை வெகுஜன ரசிகனை ரசிக்க விடுமா என்பதும் கேள்விதான்

ஆடியன்ஸ் மனதின் சூட்டை இன்னும் கொஞ்சம் உணர்ந்து இருந்தால் ஆரோமலே இன்னும் சுவையாக வந்திருக்கும்.

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share