பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் வரும் நவம்பர் மாதம் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
243 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகளை கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் பீகார் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மாநில பொறுப்பாளர் அஜீஸ் யாதவ் நேற்று (அக்டோபர் 6) பீகாரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பஞ்சாப் மற்றும் டெல்லி மாடல் போல பீகாரிலும் ஆட்சி நடத்த ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கையுடன் உள்ளது.
ஆம் ஆத்மி செய்த பணிகள் நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
எங்கள் கூட்டணி மக்களுடன் உள்ளது. நாங்கள் எந்த கட்சியுடனும் அல்லது கூட்டணியுடனும் கைகோர்க்க மாட்டோம்” என்று கூறி 11 தொகுதி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
பெகுசாராய், கஸ்பா, புல்வாரி, பாங்கிபூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.