ரசிக பாவம் பொல்லாதது
மெக்கானிக்கல் படித்து விட்டு ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் இளைஞன் சிவா (ரியோ), தன் அம்மா அப்பாவோடு சக்தியை (மாளவிகா மனோஜ்) பெண் பார்க்கப் போகிறார்.
அப்பாவின் (வெங்கடேஷ்) ஆணாதிக்கக் கட்டுப்பாட்டில் வளர்ந்த சக்தியை, பெண் பார்க்கும் வைபவத்திலேயே அவளது அப்பாவே தரையில் உட்கார வைக்க, தானும் நாற்காலியில் இருந்து கீழே உட்காரும் சிவா, தான் பெண்களை சம உரிமை கொடுத்து நடத்துபவன் என்பதை உணர்த்த, திருமணம் நிச்சயமாகிறது.
காதலும் வருகிறது.
ஆனால் கல்யாணம் முடிந்த தேன் நிலவு நாட்களுக்குப் பிறகு எல்லாம் மாறுகிறது. விடுமுறை நாளில் சமையலுக்கு உதவச் சொல்ல, அவன் உதவ, பிறகு தினமும் சேர்ந்து சமையல் செய்யும் கட்டாயம் வருகிறது.
”என் அப்பா வீட்டில் அடிமை போல இருந்தேன். நீதானே சம உரிமை தர்றேன்னு சொன்ன..” என்ற ரீதியில் அவள் பறக்கிறாள்.
தேவை இல்லாமல் பெரும்தொகை செலவு செய்கிறாள். கேட்டால் ‘பொண்டாட்டிக்கு செலவு பண்றது உன் கடமை” என்கிறாள்.
எந்தப் பொருள் என்றாலும் ரொம்ப காஸ்ட்லியாக மட்டுமே வாங்குகிறாள், ஒரு நிலையில் வீட்டில் சமைக்காமல் வெளியே ஆர்டர் பண்ணியே சாப்பிடுகிறாள்.
தாலியைக் கழட்டி பீரோவில் வைத்து விட்டு தினசரி ரீல்ஸ் போடுகிறாள். அதுவும் கவர்சியான உடைகளில் ரீல்சில் ஆடுகிறாள். அதற்கு ஆபாசமாக மற்றவர்கள் போடும் கமெண்ட் பற்றி சிவா கேட்டால் கோபப்படுகிறாள்.
சிவாவின் அம்மா அப்பாவை பொது இடத்தில் மரியாதை இன்றிப் பேசுகிறாள்.
நண்பர்கள் அனைவரையும் தோழர் தோழர் என்று சொல்லிக் கொண்டு மீந்த பிரியாணியை மற்றவர்களுக்குக் கொடுக்கலாம் என்று சிவா சொல்ல மறுத்து விட்டு, ஃபிரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சூடு செய்து சாப்பிடுகிறாள்.

திடீரென்று தன் நண்பன் ஒருவனுடன் சேர்ந்து பியூட்டி பார்லர் ஆரம்பிக்க விரும்புவதாக அவள் சொல்ல, ”தெரியாத வேலையைச் செய்யாதே.. உன் இன்னொரு தோழி துணிக்கடை வைத்ததால் நீயும் எதாவது கடை வைக்க நினைக்காதே ” என்று சிவா சொல்ல, வாக்குவாதம் அதிகமாகி, அவள் டென்ஷனாகி மயங்கி விழுகிறாள்.
அப்போதுதான் அவள் கருவுற்று இருப்பது சிவாவுக்கு தெரிய வருகிறது, அப்போதே அந்தக் கரு கலைந்து விட, புருஷன் பொண்டாட்டி உறவில் விரிசல்.
விவாகரத்து விண்ணப்பம்.. எப்படியாவது டைவர்ஸ் வாங்கிக் கொடுத்து விட வேண்டும் சக்தியின் வக்கீல் லக்ஷ்மி (ஷீலா) முயல, எப்படியாவது சேர்த்து வைத்து விட வேண்டும் என்று சிவாவின் வக்கீல் (ஆர் ஜே விக்னேஷ்) முயல,
லக்ஷ்மியும் விக்னேஷுமே விவாகரத்து செய்த தம்பதி என்பதால் ஒருவரை ஒருவர் பழி வாங்கும் வாய்ப்பாகவும் அவர்கள் இதைப் பயன்படுத்த,
விவாகரத்து கிடைத்ததா இல்லை விவகார ரத்து நடந்ததா என்பதே,
டிரம்ஸ்டிக் புரடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன் பட்டி சக்திவேல், விவேக், விஜய் ஆகியோர் தயாரிக்க, சிவகுமார் முருகேசனோடு சேர்ந்து எழுதி கலையரசன் தங்கவேலு இயக்கி இருக்கும் படம்.
சிறப்பான திரைக்கதை வசனம்

ஆரம்பத்தில் அம்பேத்கர் பிறந்த இடம் போர்பந்தர் போன்ற விஷயங்கள் ஏதோ இருக்கு என்று நினைக்க வைத்தாலும் பல படங்களில் பலமுறை பார்த்த காட்சிகள் அப்படியே வர, அடுத்தடுத்த காட்சிகள் எளிதாக யூகிக்க முடிகிற அளவிலேயே இருக்க, ‘சோனமுத்தா… இதுவும் போச்சா?’ என்ற பயத்தோடு படம் பார்ப்பவர்கள் உட்கார்ந்து இருக்க,
இடைவேளைக்கு முன்பு வரும் கேரக்டர்கள் சீரியஸ் ஆனால் ஆடியன்ஸ்க்கு காமெடி என்ற உத்தியில் வரும் ஒரு காட்சி பட்டாசு கொளுத்துகிறது. இந்த உத்தியில் ஒரு காட்சி பார்த்து எத்தனை நாளாச்சு.
இடைவேளைக்கு பிறகான படத்தின் இரண்டாவது பாதியில் விக்னேஷ்காந்த் கேரக்டருக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படத்துக்கு பெரிய பலம். இப்படி மற்ற கேரக்டர்களுக்கும் ஸ்பேஸ் கொடுத்து நடியுங்கள் ரியோ. நல்ல படங்கள் அமையும்.
விக்னேஷ்காந்த் – ஷீலா கதை, விதி என்ற பழைய படத்தைப் போல் இருக்கிறதே என்று நமக்கு தோன்றும் நொடியில் விக்னேஷ் காந்திடம் ”நீங்க பிரியக் காரணம் என்ன?” என்பது போன்ற ஒரு கேள்விக்கு அவர் ”எல்லாம் ‘விதி’தான்” என்கிறார். புத்திசாலி..
ஒரு நிலையில் எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டு சிறப்பாக பயணிக்கிறது திரைக்கதை.
குடும்ப நலக் கோர்ட்டுகளில் நடக்கும் கொடுமைகள், ஆண்கள் என்றாலே என்ன ஏது என்று விசாரிக்காமலே ஆண்களை வில்லன் போல பார்ப்பது, அதில் விவாகரத்து கேட்கும் பெண்களும் அவர்களது வக்கீல்களும் எடுத்துக் கொள்ளும் சலுகைகள், காசுக்காக கலர் மாறும் பெண் போலீஸ்கள், கோர்ட்டு ஊழியர்கள்,
மனைவி விவாகரத்து கேட்டு கொடுத்தால் கணவன் சொத்தில் பாதியும் மாத வருமானத்தில் பங்கும் கொடுக்காமல் தப்பிப்பது எப்படி என்ற ஐடியாக்கள்.. என்று சும்மா பிரித்து மேய்ந்து இருக்கிறார்கள். சபாஷ் பாரிய உழைப்பு மற்றும் தேடல் பாராட்டுகள் சிவகுமார் முருகேசன் மற்றும் கலையரசன் தங்கவேலு.

இடைவேளைக்கு முந்தைய கடைசி காட்சி சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கிறது என்றால் கிளைமாக்சில் வரும் வசனங்கள் நெகிழ்ச்சியோடு சிந்திக்க வைக்கின்றன.
அம்பேத்காருக்கும் போர்பந்தருகும் உள்ள சம்மந்தத்தை வைத்தே படத்தை முடிக்கும் விதம் அருமை.
வசனம் பேசும் முறை, மாடுலேஷன், சரியான இடைவெளிகள் விட்டு பேசுவது என்று இதுவரை இல்லாத வகையில் ரியோ சிறப்பாக நடித்துள்ளார்.
தேவதை, நச்சரிப்பவள், கோபக்காரி, அப்புறம்…. என்று மாற்றங்களை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் மாளவிகா அவினாஷ்.
விக்னேஷ், ஷீலா பொருத்தம். ஹீரோவாக நடிக்க போகிறாரா விக்னேஷ்?.
காமெடி வெடிகளால் அதிர விடுகிறது ஜென்சன் சம்மந்தப்பட்ட காட்சிகள். (அந்த ஃபாலோயர் விவகாரம் வெடிச் சிரிப்பு).
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு வண்ணம், வெளிச்சம், காட்சிக்கான பின்புலம் என்று எல்லாவகையிலும் அருமையாக இருக்கிறது.
சித்துகுமாரின் இசை நன்று.
திரைக்கதை சூடுபிடிக்க முக்கால் மணி நேரம் எடுத்துக் கொண்டது ஒரு பலவீனம்.
இருவரின் பெற்றோர் கேரக்டர்களை தவிர்த்து விட்டு விட்டு, கடைசியில் ஓரிரு காட்சிகள் மட்டும் வைத்து இருப்பதை சரி செய்து இருக்கலாம்.

காமெடி என்ற நோக்கில் போவதால் மன்னிக்கலாம். எனினும் இதை எல்லாம் சரி செய்து இருந்தால் இந்தப் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.
பொதுவாக சினிமாக்களில் அம்மாவின் பாசம் போற்றப்படுவது போல அப்பாவின் பாசம் போற்றப்படுவது இல்லை. எனவேதான் அப்பா பற்றி வரும் படங்களும் பாடல்களும் பெரும்பாலும் ரசிகர்களை – பெண்களைக் கூட கவர்கிறது.
அதே போல விவாகரத்து வழக்குகளில் பெண்கள் படும் கஷ்டங்கள் பேசப்படுவது போல பணம், மரியாதை, சொத்து, நிம்மதி எல்லாம் இழந்து ஆண்களும், ஆண் பெண் இருவரின் பெற்றோர்களும் படும் கஷ்டங்களை பெரும்பாலும் இதுவரை எந்தப் படமும் சரியாகப் பேசவில்லை என்பதுதான் இந்தப் படத்தின் பெரும்பலம். இதை விடவும் பல முக்கிய விஷயங்கள் திரையில் காத்திருக்கின்றன.
ஒழுங்காக கதை திரைக்கதை எழுதாமல் கடமைக்கு எழுதி படம் எடுத்து படம் பார்க்க வருபவரை கதறவிடும் ரசிகபாவம் பொல்லாதது என்பது இந்தப் படக்குழுவுக்கு தெரிந்து இருக்கிறது.
– ராஜ திருமகன்
