ஒரு படம் வெளியாவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் சொன்னதற்கும், அதன்பிறகு அவர்கள் நடந்துகொள்வதற்கும் வித்தியாசம் இருப்பதைச் சில நேரங்களில் அறிய நேரிடும். அப்படத்தின் வெற்றியோ, தோல்வியோ அவர்களது நிலைப்பாட்டை மாற்றக் காரணமாக இருக்கும். அதன்பிறகு, ’பொதுவெளியில் பகிரங்கமாகச் சொன்னதை நிறைவேற்றியாக வேண்டுமா என்ன’ என்பது போல அவர்களது செயல்பாடு இருக்கும். ஆனால், ‘நான் அப்படியில்லை’ என்பது போலத் தன்னிலையைத் தெளிவுபடுத்தி இருக்கிறார் இந்தி நடிகர் அமீர்கான்.
சமீபத்தில் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் ஜெனிலியா உடன் அவர் நடித்த ‘சிதாரே ஜமீன் பர்’ வெளியானது. ஸ்போர்ட்ஸ் டிராமா வகைமையில் அமைந்த இப்படமானது சுமார் 260 கோடி ரூபாயை உலகம் முழுக்க வசூல் செய்தது.

இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்னரே, ‘இப்படம் தியேட்டர்களில் பெரியளவில் வெற்றியடைந்தாலும் ஓடிடி தளங்களில் இதனை வெளியிடுவதாக இல்லை’ என்று தெரிவித்திருந்தார். கூடவே, யூடியூபில் அனைத்து மக்களும் பார்க்கும் வகையில் வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார். அதனை இப்போது செயல்படுத்தப் போகிறார்.
மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் அதனைத் தெரிவித்திருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று ‘அமீர்கான் டாக்கீஸ்’ எனும் யூடியூப் சேனலில் ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தை ரசிகர்கள் கண்டு மகிழலாம். அதேநேரத்தில், அதனை இலவசமாகக் காண முடியாது. இந்தியாவில் அப்படத்தைப் பார்க்க யூடியூபில் ரூ.100 செலுத்த வேண்டும்; அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் காணத் தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ‘சிதாரே ஜமீன் பர்’ படக்குழு தெரிவித்திருக்கிறது.
குறைந்தளவிலான கட்டணம் என்பது அதிகளவிலான ரசிகர்களின் பார்வையைக் கொணரும் என்பது அப்படக்குழுவின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. நினைத்ததைப் போலவே வெற்றி அமைந்தால் இது போன்ற முயற்சிகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறது திரையுலகில் பல கண்கள்.