ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலினை இன்று (செப்டம்பர் 5) வெடிகுண்டு வீசி கொலை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் மர்ம கும்பலை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாமக தலைவர் அன்புமணியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் உள்ளார். இவர் மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளரான ம.க.ஸ்டாலின் ராமதாஸின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவர் இன்று பேரூராட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு கும்பல் காரில் வந்து வெடிகுண்டு வீசியது. மேலும், அரிவாளால் தாக்க முயன்றது. அப்போது ஸ்டாலின் அங்குள்ள ஒரு அறையில் தப்பிக்க முயன்ற நிலையில் இளையராஜா, அருண் ஆகிய இருவருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு திரண்ட பா.ம.க தொண்டர்கள் மற்றும் வன்னியர் சங்கத்தினரும், கொலை முயற்சிக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி, கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். அதோடு டயர்களை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போர்க்களம் போல் காட்சியளித்த அப்பகுதி பெரும் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஆடுதுறையில் கடைகள் அடைக்கப்பட்டன. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் பேருந்துகள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன.
இந்த சாலை மறியல் போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற நிலையில், போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
அதன்பின்னர் போராட்டம் செய்தவர்களிடம் நேரில் சென்று பேசிய ம.க.ஸ்டாலின், “சாலையை மறிக்க வேண்டாம். அவ்வாறு செய்வது தவறு, போராட்டத்தை உடனே கை விடுங்கள்” என சொன்னதை கேட்டு அதன்பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலினை ஒரு கும்பல் வெடிகுண்டு வீசி படுகொலை செய்ய முயற்சி செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஒரு பேரூராட்சித் தலைவரை அவரது அலுவலகத்திற்குள் புகுந்து குண்டு வீசி படுகொலை செய்யத் துணியும் அளவுக்கு சட்டம் & ஒழுங்கு சீர்குலைந்திருப்பது கவலையளிக்கிறது; இதற்காக ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும்.
ஆடுதுறையின் பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள பேருராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து குண்டு வீசி படுகொலை செய்ய முயலும் அளவுக்கு அந்த கும்பலுக்கு துணிச்சல் வந்தது எப்படி? தமிழ்நாட்டில் சட்டம் & ஒழுங்கு என்ற ஒன்றே இல்லை.
அதனால் யாரை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் படுகொலை செய்யலாம்; அதைத் தடுக்க காவல்துறை முயற்சி செய்யாது என்ற எண்ணம் கொலைகாரர்கள் மத்தியிலும், கூலிப்படையினர் மத்தியிலும் பரவியிருப்பது தான் இதற்கு காரணம்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த நான்கரை ஆண்டுகளில் 7 ஆயிரத்திற்கும் கூடுதலான கொலைகள் நடந்துள்ளன. அனைத்து வகையான குற்றங்களும் அதிகரித்துள்ளன. அதனால், வெளியில் சென்றால் பாதுகாப்பாக வீடு திரும்ப முடியுமா? என்று மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை நிலவுகிறது.
இந்த நிலையை மாற்றவும், தமிழ்நாட்டில் சட்டம் & ஒழுங்கை நிலை நிறுத்தவும் காவல்துறை உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலினை படுகொலை செய்ய முயன்ற கும்பலையும், அதை ஏவி விட்டவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். ம.க.ஸ்டாலினுக்கும், அவரது வீடு மற்றும் அலுவலகங்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.