ஆதார் அடையாள அட்டை சரியான ஆவணம் இல்லை; ஒருவர் இந்திய குடிமகன் என்பதை நிரூபிப்பதற்காக ஆவணம் இல்லை என மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் பீகார் சிறப்பு வாக்காளர் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவற்றை இந்திய குடிமகனுக்கான ஆவணமாக ஏற்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது; இதற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க கோரி இந்த பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை கடந்த ஜூலை மாதம் விசாரித்த போது, ஆதார் அட்டையை இந்திய குடிமகனுக்கான ஆவணமாக ஏற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் நேற்று ஆகஸ்ட் 12-ந் தேதி நடந்த விசாரணையின் போது, ஆதார் அட்டை சரியான ஆவணம் இல்லை என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மும்பை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?
இதேபோல மும்பை உயர்நீதிமன்றமும் ஆதார் அட்டை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த பாபு அப்துல் ரூஃப் சர்தார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தமக்கு ஜாமீன் கோரி பாபு அப்துல் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் விசாரித்தது.
அப்போது, தாம் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதை அரசு தரப்பால் நிரூபிக்க இயலவில்லை; ஆதார் உள்ளிட்ட இந்திய ஆவணங்கள் அனைத்தும் தம்மிடம் இருப்பதாக, பாபு அப்துல் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஒருவர் வைத்திருப்பதாலேயே இந்திய குடிமகனாகிவிட முடியாது. இவை சரியான சான்றும் அல்ல.. இவை சேவைகளைப் பெறுவதற்கான ஆவணங்கள்தான் என்று குறிப்பிட்டு பாபு அப்துல் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது மும்பை உயர்நீதிமன்றம்.