ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் ஏ1 குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் ஸ்டான்லி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.
கடந்த 2024 ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் வழக்கறிஞர்கள், ரவுடிகள் என 27 பேர் கைது செய்யப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 30 பேர் மீது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் சென்னை மாநகர காவல்துறை 2024 அக்டோபர் 3ஆம் தேதி தாக்கல் செய்தது.
அதில், முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதியும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முதல் குற்றவாளியுமான நாகேந்திரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என்று மருத்துவமனையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த நாகேந்திரன் மஞ்சள் காமாலை நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் ‘இரத்த சிவப்பணுக்கள் உடையும்போது உருவாகும் ஒரு மஞ்சள் நிறமியான பிலிரூபின் படிவுகள் மூளைவரை சென்று நாகேந்திரனுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் இதனால் அவர் மனநிலை மாதிப்படைந்தவர் போல் நடந்துகொள்வதால் அவரது கைகளும், கால்களும் கட்டப்பட்டிருப்பதாக’ மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
இவருடைய் இரண்டு மகன்களான காங்கிரஸில் இருந்த அஸ்வத்தாமன் மற்றும் பாஜகவில் இருந்த அஜித்ராஜ் ஆகியோர் சிறையில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.