திருப்பூரில் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த காவலர் மீது போதையில் இருந்த இளைஞர் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதை தொடர்ந்து காலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சொர்க்க வாசல் வழியாக சென்று வருகின்றனர். இதனால் இன்று முழுவதும் அங்கு திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் அங்கு திடீரென வந்த இளைஞர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் போதையில் இருந்த நபர் தான் கையில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து திடீர் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போலீசாரை தாக்க முயற்சித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவலர் ராமகிருஷ்ணன் தன்னை தற்காத்து கொள்ள தனது இடுப்பில் இருந்த பெல்ட்டை கொண்டு தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த போதை ஆசாமி மற்ற காவலர்களை தாக்க முயன்றார். இதையடுத்து போலீசார் போதை ஆசாமியை மடக்கி பிடித்து அவர் கையில் இருந்த கத்தியை பிடுங்கினர்.
அதனை தொடர்ந்து போதையில் இருந்த வாலிபரை சோதனை செய்ததில் அவரிடம் மிளகாய் தூள் மற்றும் தாக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதம் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த இளைஞரை காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த இளைஞர் தஞ்சாவூரை சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் இளங்கோ என்றும் தெரியவந்தது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
