ADVERTISEMENT

களைத்துப்போன பிரதமரும் புளித்துப்போன கதைகளும்!

Published On:

| By Minnambalam Desk

சஞ்சய் கே. ஜா

2014இல் காணப்பட்ட மோடியின் மங்கிய, சலிப்பான வடிவத்தைச் சுதந்திர தின உரையில் இந்தியா கண்டது.

கவர்ச்சியான ஒரு பேச்சு அர்த்தமற்றதாக ஒலிக்கும்போது, பேசுபவரின் நோக்கம் தோற்றுப்போகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் முந்தைய சாதனைகள், அவரது சுதந்திர தினப் பேச்சில் இடம்பெற்றிருந்த அரசியலமைப்பு, ஒற்றுமை, நடுநிலைமை, தற்சார்பு, தொழில்நுட்ப புத்தாக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற உயர்ந்த லட்சியங்களை அர்த்தமற்றதாக்கிவிட்டன.

ADVERTISEMENT

பழிவாங்கும் அரசியல்

போலிப் பிரச்சாரங்களின் மெல்லிய அடுக்குகளைக் கிழித்து வெளிவருவது உண்மைகளின் இயல்பு. “குடிமக்களைத் தேவையற்ற வகையில் சிறையில் அடைக்கப் பயன்படுத்தப்படும் சட்டங்களை நீக்குவது” பற்றி பிரதமர் பேசும்போது, எதிர்க்கட்சிகள் அவரது ஆட்சியை விமர்சிக்கப் பயன்படுத்தும் “பழிவாங்கும் அரசியல்” தான் மனதில் வந்து போகிறது.

ADVERTISEMENT

அரசியல் எதிரிகள், விமர்சகர்கள், சுதந்திரமான பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரைக் குறிவைக்க, மத்திய முகமைகளும் கடுமையான சட்டங்களும் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தப்படுகின்றன. தேசிய விவாதங்களில் இது ஆதிக்கம் செலுத்துகிறது. பல்வேறு மட்டங்களில் நீதிமன்றங்களாலும் இது மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டது.

பலரும் பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்படுகிறார்கள். சாதாரண ட்வீட்களுக்காகவும், அமைதியான போராட்டங்களில் பங்கேற்றதற்காகவும் கைது செய்யப்படுகிறார்கள். பல வழக்குகளில், பிணை வழங்குவதற்கான நீதிமன்ற நடவடிக்கைகள் அசாதாரணமான தாமதங்கள் அல்லது பல ஆண்டுகள் நீடிக்கும் தடங்கல்களை எதிர்கொண்டன.

ADVERTISEMENT

ஒற்றுமையைக் குலைப்பது யார்?

பிரதமர் ஒற்றுமை, கூட்டு முயற்சி பற்றியெல்லாம் பேசும்போது, இந்த உன்னத நோக்கத்தைக் கெடுப்பவர்கள் யார் என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் மனதில் எழுகிறது. மோடி அவ்வப்போது உதிர்க்கும் கடுமையான கருத்துக்கள், வகுப்புவாதப் பிளவைத் தூண்டும் அவரது கிண்டல்கள் ஆகியவை மீண்டும் நம்மைத் துரத்துகின்றன.

மகாத்மா காந்தியைக் குறிப்பிட்டுப் பேசிய மோடி, அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்குத் தலைவணங்குவதாகக் கூறினார். ஆனால், காந்தியக் கோட்பாடுகள் முன்னிறுத்திய சகிப்புத்தன்மை, சமத்துவம், நீதி ஆகிய அரசியலமைப்புக் கோட்பாடுகளை ஏளனம் செய்யும் வகையில் தொடர்ச்சியாகப் பொழியப்பட்ட வெறுப்புப் பேச்சுகள் குறித்த நினைவுகள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தின.

அரசியல் பேச்சுக்களை அரசியல் செயல்பாடுகளிலிருந்து துண்டித்துவிட முடியாது. முஸ்லிம்களைத் துன்புறுத்தும் ஒரே நோக்கத்துடன், கடந்த கால எலும்புக்கூடுகளைத் தோண்டியெடுக்கும் அசிங்கமான பிரசாரங்களும், ஊடகங்களிலும் கிராமப்புறங்களிலும் மேற்கொள்ளும் வெறுப்புப் பிரச்சாரங்களும், அரசியலமைப்பு உத்தரவாதங்களுக்கு எதிரான வெளிப்படையான மறுப்புகளாகச் செயல்படுகின்றன.

சலித்துப்போன புகார்கள்

“நான் முந்தைய அரசாங்கங்களையோ, அரசியல் எதிரிகளையோ விமர்சிப்பதற்காக இங்கே இல்லை” என்று பேசும் மோடி, உடனடியாகத் தன் முன்னோர்கள்மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுக்கிறார். சிந்து நதிநீர் ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு தீங்கு விளைவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது என்று சொல்வது கேலிக்கூத்தானது. அந்த ஒப்பந்தத்திற்காக காங்கிரஸ் அரசாங்கம் குற்றம் சாட்டப்பட்டால், பசுமைப் புரட்சி பற்றிக் குறிப்பிடும்போது அதன் பெருமையை ஏன் இந்திரா காந்திக்குக் கொடுக்கக் கூடாது?

முதிர்ந்த ஜனநாயகம், கட்சி அரசியலுக்கான இடத்தை அனுமதிக்கிறது. குறைக்கடத்தி உற்பத்தி தொடர்பான கோப்புகள் 50 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்ததாகப் பிரதமர் குறிப்பிட்டார், ஆனால் அறிவியல், ஆற்றல், விண்வெளி ஆகிய துறைகளில் சிறந்த நிறுவனங்களை நிறுவியதற்காக ஜவஹர்லால் நேருவையும் இந்திரா காந்தியையும் பாராட்டத் தவறிவிட்டார். குறைக்கடத்தித் துறையில்கூட அவர் சொன்னது சரியல்ல. பெரும்பாலான பெரிய குறைக்கடத்தி நிறுவனங்கள் 2014க்கு முன் நிறுவப்பட்டவை; சண்டிகரில் உள்ள அரைக்கடத்தி உற்பத்தி வளாகம் 1983இல் நிறுவப்பட்டது.

பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு யாரும் கவனம் செலுத்தவில்லை என்று மோடி குற்றம் சாட்டினார். வரலாற்றை அல்லது நிர்வாகத்தை அறிந்த எவரும் இதுபோன்ற பொய்யான கூற்றுகளைச் சொல்லத் துணிய மாட்டார்கள். மோடி தேசிய அரசியலுக்கு வருவதற்கு முன்பே, நாட்டில் கூட்டுறவு இயக்கமும் பெண்கள் சுய உதவிக் குழுக்களும் செழித்து வளர்ந்தன.

“யாரும் கவனம் செலுத்தவில்லை” என்று அவர் துணிச்சலாகக் கூறினார். இந்த இயக்கத்தை இந்தியாவில் தொடங்கிவைத்த பெருமையை அவர் தனக்குக் கோரிக்கொண்டார். “மற்றவர்களின் கோட்டைச் சிறிதாக்க உங்கள் ஆற்றலைச் செலவழிக்கக் கூடாது. உங்கள் கோட்டை நீளமாக்கப்பட வேண்டும்” என்று கூறினார். ஆனால், நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி ஆகியோரைச் சிறுமைப்படுத்துவதுதான் அவரது விருப்பமான அரசியல் விளையாட்டு. மற்றவர்களின் “கோட்டை”ச் சிறிதாக்கும் திறன் அவருக்கு வேறு எந்த அரசியல்வாதியையும்விட அதிகமாக உள்ளது.

மோடி சோர்வடைந்த பிரதமரைப் போலத் தோன்றினார். சொல்லிக்கொள்வதற்கான அவரது சாதனைகள் குறைவாக இருந்தன. புதிய தொலைநோக்கை அவரால் வழங்க முடியவில்லை. பழைய கோஷங்களை மீண்டும் அமைத்து, தோல்வியடைந்த வாக்குறுதிகளைக் கடைபரப்பினார். பழைய மனிதராக, ஊக்கமளிக்கும் திறனற்றவராகக் காணப்பட்டார். அவரது பேச்சு, கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நாடு கேட்டுக்கொண்டிருந்த அதே தந்திரங்களையும் வெற்று கோஷங்களையும் கொண்டிருந்தது.

இன்னும் எத்தனை காலம் இந்தப் பேச்சு?

‘உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவளிப்போம்’ என்பதை நாம் எத்தனை முறை கேட்டிருக்கிறோம்? இந்தக் கொள்கையை அமல்படுத்த என்ன நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? 11 ஆண்டுகள் பதவியில் இருந்த பின்னரும், இந்தியா இன்னும் உரத்திற்காக மற்ற நாடுகளைச் சார்ந்து இருப்பதாக ஒரு பிரதமர் வருத்தப்படலாமா? கோயில்களில் பூஜை செய்தும், ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தும், பணி நியமனக் கடிதங்களை விநியோகித்தும், பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்தும் அவர் ஏன் நேரத்தை வீணடித்தார்? விதிகளை மாற்ற வேண்டுமானால், என்னிடம் வாருங்கள் என்று அவர் கூறினார். 11 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே பேச்சுத்தானா? ‘மேக்-இன்-இந்தியா’ திட்டத்தின் கதி என்ன? குறு, சிறு நிறுவனங்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்திய பணமதிப்பழிப்பு பற்றி என்ன ஆனது?

தற்சார்பு என்ற வெற்று முழக்கம் காதுகளைத் துளைத்த்தாலும், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 2014ல் $37 பில்லியனிலிருந்து 2024இல் $100 பில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்தது. தற்சார்பு இந்த அரசாங்கத்தின் நோக்கமாக இருந்திருந்தால், பசுப் பாதுகாப்புப் போராட்டம், காவடி யாத்திரை, மசூதிகளைத் தோண்டுவது, லவ் ஜிகாத், ஹலால்-ஹிஜாப், குடியுரிமைத் திருத்தச் சட்டம், வக்பு சட்டம் போன்றவற்றில் ஏன் நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்க வேண்டும்? அறிவியல் மனப்பான்மை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முனைப்புக் கொண்ட ஒரு பிரதமர், இந்தியாவின் புதிய விழிப்புணர்வு ராமர் கோயிலிலிருந்தும் கும்ப மேளாவிலிருந்தும் வந்தது என்று நாட்டுக்குச் சொல்ல மாட்டார்.

மோடி கங்கை நீரைக் கூட அண்டை நாடுகளுக்கு எடுத்துச் சென்றார், இந்தியாவிடம் இதைவிட சிறந்த எதையும் வழங்கவில்லை என்பதுபோல. தற்சார்பு, மேக்-இன்-இந்தியா திட்டத்தின் வெற்றியை வைத்து 2024இல் அவர் வாக்கு கேட்டாரா? அல்லது “தாலிபாக்கியம்-முஜ்ரா”, “அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுபவர்கள், ஊடுருவிகள்” போன்ற போலியான பேச்சுக்கள் மூலம் வெறுப்பு அரசியலை நம்பியிருந்தாரா?

மக்களின் அறியாமை மீதான நம்பிக்கை

ஊடுருவிகள் போன்ற பழைய பூச்சாண்டிக் கதைகள் ஒரு புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப முடியாது. தனது பேச்சில் மோடி இந்த விஷயத்தை வலியுறுத்தி, இதை ஒரு பெரிய தேசிய சவாலாகக் காட்டினார். இந்தியாவின் மக்கள் தொகையை மாற்றவும், இந்திய இளைஞர்களின் வேலைகளைப் பறிக்கவும் தீய சதி நடப்பதாக அவர் கூறினார். இது எப்போது நடந்தது? இது திறமையற்ற காங்கிரஸ் ஆட்சிகளால் விட்டுச் செல்லப்பட்ட ஒரு பிரச்சனையாக இருந்தால், கடந்த 11 ஆண்டுகளில் மோடி என்ன செய்தார்? இத்தகைய மலிவான தந்திரங்கள் மூலம் மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதற்குக் காரணம் மக்களின் அறியாமையில் அவருக்கு இருக்கும் நம்பிக்கை.

இந்தியா, 2014ல் காணப்பட்ட மோடியின் மங்கிய, சலிப்பான வடிவத்தை இந்தச் சுதந்திர தினத்தன்று கண்டது. பழைய பொருட்கள் பழைய உறைகளில் விற்கப்பட்டன. புதிய விஷயங்களைப் பற்றிய பேச்சுக்கள் தொலைநோக்கைக் காட்டாமல், விரக்தியைக் காட்டின. ஜிஎஸ்டியைச் சீர்திருத்துவதற்கான வாக்குறுதி பெரிய தீபாவளி போனஸாக முன்வைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிவந்த வருமான வரிச் சட்டங்களில் ஏற்பட்ட மாற்றத்தைக் கூட பிரதமர் சீர்திருத்தமாக முன்வைத்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வரிப் போருக்குப் பின்னர்தான் இந்த ஞானம் அவருக்கு வந்ததா என்று யூகிப்பது கடினம்.

ஏழ்மை, அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, சமூகப் பூசல்கள் அல்லது ஜனநாயகத்தில் அதிகரித்துவரும் அச்சம் ஆகியவற்றிலிருந்து மக்களைக் காக்காத பாதுகாப்பு கவசமான சுதர்சன சக்கரம் பற்றியும் அவர் பேசினார்.

இந்த சுதர்சன சக்கரம் கற்பனையான வெளிப்புறத் தாக்குதல்களிலிருந்து உழைக்கும் மக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. இதை நினைத்து மகிழ்ச்சியடைய வேண்டியதுதான். யாருடைய வங்கிக் கணக்கிற்கும் வராத கற்பனை ரூ.15 லட்சம், பல ஆண்டுகளாக மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லையா? அதுபோலத்தான் சுதந்திர தினத்தன்று மோடி கடைபரப்பிய கற்பனைகளும்.

சஞ்சய் கே. ஜா அரசியல் விமர்சகர்

நன்றி: தி வயர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share