கோவையில் உள்ள ஜி. டி. கார் அருங்காட்சியகத்தில் செயல்திறன் கார் பிரிவு (Performance Car Section) புதிதாக துவக்கப்படவுள்ளது.
இது குறித்து ஜி. டி. நாயுடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி. டி. கோபால், அறங்காவலர்கள் ஜி. டி. ராஜ்குமார், அகிலா சண்முகம் ஆகியோர் கூறுகையில், ”முதல் ஜி.டி.கார் அருங்காட்சியகம், கடந்த 2015 ஏப்ரல் மாதத்தில் துவங்கப்பட்டது. அனைத்து வயதில் உள்ள பொதுமக்களிடமிருந்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து வாகனத்துறையில் புதிய சேகரிப்புகளை ஜி.டி.அருங்காட்சியகம் சேர்த்து வருகிறது.
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் வாகனத்துறையில் இந்தியாவின் சாதனைகளை காட்சிப்படுத்தும் வகையில், 2013 ஆம் ஆண்டு இந்திய கார்களுக்காகப் பிரத்யேகமான இந்திய கார் பிரிவு ஜி.டி.கார் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு துவக்கி வைக்கப்பட்டது.
இப்பொழுது, ஒரு புதிய முயற்சியாக இன்றைய இளைஞர்கள் பழைய வரலாற்றை அறிந்து கொள்ளவும், வாகனத்துறையில் ஆர்வத்தை தக்கவைத்துக்கொள்ளவும், இவ்வாகனங்களை பாதுகாக்கவும் ஜி.டி அருங்காட்சியகம் “பர்ஃபார்மன்ஸ் கார் பிரிவு” எனப்படும் புதிய பகுதியை சேர்த்துள்ளது.
இந்தப் பிரிவில் ஸ்போர்ட்ஸ் கார்கள், சூப்பர் கார்கள், லக்சூரி கார்கள் மற்றும் ரேஸ் கார்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் லாம்போர்கினி, ஃபெராரி, மெக்லாரன், லோட்டஸ், மசெராட்டி, அஸ்டன் மார்டின், மாஸ்டா, போர்ஷே பாக்ஸ்டர், ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் போன்ற புகழ்பெற்ற வாகனங்கள் அடங்கும்.
கோயம்புத்தூர், ஸ்போர்ட்ஸ் கார் ஆர்வலர்களுக்கான ஒரு மையமாக இருப்பதால், இந்த துறையின் முன்னோடிகளையும் கோயம்புத்தூரில் தயாரிக்கப்பட்ட பல்வேறு ரேஸ் கார்களையும் வெளிப்படுத்துவதற்காக ஒரு சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு, புகழ்பெற்ற கார் பந்தய வீரர் கரிவரதன் உருவாக்கிய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரேஸ் கார் – போர்டு ஜிடி40, மேலும் எல்ஜிபி ரோலான், எம்ஆர்எப் 2000 போன்ற பல்வேறு ரேஸ் கார்களும் இடம்பெற்றுள்ளன.
கோவை, மோட்டார் விளையாட்டு துறைக்கு வழங்கிய சிறப்பான பங்களிப்புகளான “ஆட்டோ காம்போனென்ட்ஸ், கோ-கார்ட், ஃபார்முலா ரேஸ் கார்கள், ரேஸ் டிராக்குகள், மோட்டார் விளையாட்டு அணிகள், பண்பாடு மற்றும் பாரம்பரியம்” ஆகியவற்றை இந்தப் பிரிவு வெளிப்படுத்துகிறது.
மேலும், கோயம்புத்தூரை இந்தியாவின் மோட்டார் விளையாட்டு தலைநகரமாக்கிய அதன் ரேசிங் ஆவல் மற்றும் அதற்குப் பின்னால் இருந்த வரலாற்றையும் இந்தப் பகுதி சிறப்பாக விளக்குகிறது” இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பிவா ஹால் ஆஃப் பேம் 2025
இந்தப் பிரிவின் துவக்க விழா, வரும் அக்டோபர் 17, 2025 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கு ஜி. டி. நாயுடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி. டி. கோபால், முன்னிலை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக சர்வதேச வரலாற்று வாகனங்களின் கூட்டமைப்பின் துணை தலைவர் (தொடர்பு), ராமின் சல்லேகு பங்கேற்று பொது மக்கள் பார்வைக்கு துவக்கிவைக்கிறார்.
இந்த விழாவில் தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறையின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொளரவ விருந்தினராக கலந்து கொள்கிறார். கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் மற்றும் கோயம்புத்தூர், பாரதிய வித்யபவன், தலைவர், டாக்டர். பி. கே. கிருஷ்ணராஜ் வானவராயர் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
இந்த நிகழ்வில், பழமையான கார்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள சர்வதேச அமைப்பான பிவா, ஜி. டி. கோபால் அவர்களுக்கு பிவா ஹால் ஆஃப் பேம் 2025- என்ற விருதை வழங்குகிறது. இந்த கௌரவத்தை பெறும் இரண்டாவது இந்தியர் கோபால் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விருது வழங்கும் நிகழ்விற்கு பிவா அமைப்பின் ஆலோசகர் கவுதம் சென் கலந்து கொள்கின்றார். இந்த செயல்திறன் கார் பிரிவை பொது மக்கள் அக்டோபர் 22 – முதல் பார்வையிடலாம் என தெரிவித்தனர்.