பொங்கல் விடுமுறை : வரைவு வாக்காளர் பட்டியல் திருத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – பெ.சண்முகம்

Published On:

| By Pandeeswari Gurusamy

பொங்கல் பண்டிகையையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்குதல் செய்வதற்கான கால அவகாசத்தை வரும் ஜனவரி 28ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகியவற்றிற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. பிப்ரவரி 17, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டியும், தொடர் விடுமுறையின் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். எனவே. ஜனவரி 10ந் தேதியிலிருந்து 18ந் தேதி வரை இப்பணிகள் மேற்கொள்வதற்கும். பொதுமக்கள் இந்த நடவடிக்கையில் கலந்து கொள்வதற்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பல லட்சம் வாக்காளர்கள் விடுபடும் அபாயம் உள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம், இணைப்பு, ஆட்சேபணைகள் மீது முடிவெடுப்பது ஆகியவற்றிற்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அவகாசத்தை குறைந்தபட்சம் 10 நாட்கள் நீட்டித்து 2026 ஜனவரி 28-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதனைப் பயன்படுத்தி 2026 ஜனவரி 24.25 தேதிகளில் சிறப்பு முகாம் நடத்திட கேட்டுக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

மேலும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியில் வெளியிடப்பட்டிருந்த வரைவு வாக்காளர் பட்டியலுக்கும், 2025 ஜனவரியில் வெளியிடப்பட்டிருந்த இறுதி வாக்காளர் பட்டியலுக்கும் இடையில் ஒப்பீடு செய்யும் போது நீக்கப்பட்டவர்கள், இணைக்கப்பட்டவர்கள் ஆகிய எண்ணிக்கையும் சேர்த்து பாகம் வாரியாக / தொகுதி வாரியாக பரிசீலிக்கும் போது பல குளறுபடிகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறோம். அதுகுறித்த எங்களுடைய கணிணி ஆய்வுக்குழு நடத்திய உண்மை காணும் அறிக்கையில் வந்துள்ள விபரங்களை ஒரு குறிப்பாக இத்துடன் இணைத்துள்ளோம். இதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share