எதற்காக ஸ்டாலின் மீண்டும் வேண்டும்?: ஆ.ராசா பேச்சு!

Published On:

| By Kavi

மோடியையும், அமித்ஷாவையும் தடுத்து நிறுத்தக் கூடிய ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின் தான் என்று ஆ.ராசா கூறியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி- சென்னை, விழுப்புரம் மண்டல மாநாடு” இன்று (பிப்ரவரி 11) மாலை நடைபெற்றது. 

ADVERTISEMENT

இதில்  கலந்துகொண்டு பேசிய திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா,  “சில நாட்களுக்கு முன்னால் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்,  பீகார் தேர்தலுக்காக அங்கு சென்றார்.  வாக்குத் திருடர்களே ஜனநாயகத்தை வாழ விடுங்கள் என்று தெருவில் இறங்கி போராடினார்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கக் கூடிய பதவியில் இருக்கக்கூடிய தலைவர்  தெருவுக்கு வந்து போராடிய போதும் பீகாரில் நீதி கிடைக்கவில்லை. 

ADVERTISEMENT

சில நாட்களுக்கு முன்னால் மேற்கு வங்க முதல்வர், இதுவரை எந்த முதல்வரும் செய்யாததை செய்தார். உச்ச நீதிமன்றத்துக்கு சென்றார். வாக்குத் திருடர்களை அங்கு வெளிப்படையாக விமர்சித்தார். உச்ச நீதிமன்றமே அதிர்ந்து போனது.  கேரள முதலமைச்சர், தேர்தல் ஆணையம் திருட்டு ஆணையம் என்று  கதறி கதறி அழுகிறார். 

நாமும் ஒப்புக்கொள்கிறோம், தேர்தல் ஆணையம் திருட்டு ஆணையம் என்று. ஆனால் இங்கு கூச்சல் இல்லை, குழப்பம் இல்லை. வாக்கு திருடர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் திருடாமல் பார்த்துக்கொள்ளும் தலைவரை தமிழ்நாடு பெற்றிருக்கிறது. 

ADVERTISEMENT

என்.ஆர். இளங்கோ இங்கே வந்து உரையாற்றியிருக்க வேண்டும். ஆனால் வழக்கு ஒன்றின் காரணமாக அவரால் இங்கு வரமுடியவில்லை. இந்தியாவிலேயே எந்த கட்சியும் செய்யாத பணியை, பிஎல்ஏ-2-ஆகிய நீங்கள் செய்திருக்கிறீர்கள். ஒவ்வொரு இல்லமாக சென்று செய்தீர்கள்.  

ஆனால் தேர்தல் ஆணையம் 26.5 லட்சம் பேர் இறந்துவிட்டனர்,  3.50 லட்சம் பேர் இரட்டை பதிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள், 66.5 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள் என்று சொல்கிறது. 

இதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு உங்கள் தோளில் இருக்கிறது. படிவம் 6-ஐ எப்படி பூர்த்தி செய்ய வேண்டும். தவறாக கொண்டு வந்து சேர்த்தால் படிவம் ஏ-வின்படி எப்படி விளக்க வேண்டும் என்று உங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.  

இதுதவிர நோ மேப்பிங் என்ற வகையில், பெயர் மாற்றம், இனிஷியல் மாற்றம், எழுத்து பிழை  என 50 லட்சம் பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.  எனவே இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் செய்யாத வகையில், உச்ச நீதிமன்றத்தின் கதவை நாம் தட்டினோம். 

‘நோ மேப்பிங்’ என்று சொல்லப்படுகிற அந்த 50 லட்சம் பேரைச் சேர்ப்பதற்கும், இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்களைச் சரிசெய்வதற்கும்… அரசாங்கம் மட்டும் செய்யக்கூடாது, எங்கள் பி.எல்.ஏ 2 – களையும் வைத்துக்கொண்டுதான் செய்ய வேண்டும் என்று உத்தரவைப் பெற்ற ஒரே இயக்கம் இந்த இயக்கம் தான்” என்று கூறினார். 

மேலும் அவர்,  “விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, அன்புக்கரங்கள், கலைஞர் வீட்டு வசதித் திட்டம் என, இதற்காக மட்டுமா இந்த முதலமைச்சர் மீண்டும் வர வேண்டும்…

ஆண்டுக்கு 4,000 மருத்துவ மாணவர்களை, தாழ்த்தப்பட்டவர்களை, பிற்படுத்தப்பட்டவர்களைப் படிப்பதற்கு வழிவகை செய்தாரே, அதற்காக மட்டுமா அவர் மீண்டும் வர வேண்டும்… அதற்காகவும் வர வேண்டும்…

நேரு, அம்பேத்கர், வல்லபாய் பட்டேல் போன்றோர் அரசியல் சட்டத்தை உருவாக்கினர். எத்தனை மதங்கள், எத்தனை ஜாதிகள், எத்தனை மொழிகள் என இத்தனை வேற்றுமைகளையும் ஒற்றுமையாக வைத்து நாம் எப்படி ஆளப்போகிறோம் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் அரசியல் சட்டம்.

அந்த அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என அனவருக்கும் உரிமை இருக்கிறது.  இந்த உரிமைகளை எல்லாம் பாதுகாப்பதற்கு சட்டமன்றம் நாடாளுமன்றம் இருக்கிறது. நாடாளுமன்றத்தையும் சட்டமன்றத்தையும் உருவாக்குவதற்கு தேர்தல் ஆணையம் இருக்கிறது.  இவை தவறு செய்தால், கேள்வி கேட்பதற்கு உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்கள் உள்ளன.   

இத்தனையும் தந்திருக்கக்கூடிய அரசியல் சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு,   ‘ஒரே ஆட்சி, ஒரே மதம், ஒரே மொழி’ என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிற அமித் ஷாவுக்கும் மோடிக்கும் பதில் சொல்லக்கூடிய, தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் மிக்க ஒரு தத்துவத் தலைவன் இந்தியாவில் இருக்கிறார் என்றால், அது மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற இந்த மாமனிதர்தான்.” என்று பேசினார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share